விஜய் சேதுபதி எடுத்த முடிவு?
தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்த நிலையில், அதற்கு விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என பதில் அளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில், விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது.
இதற்குத் தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ட்விட்டரிலும் #shameonvijaysethupathy என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.
இவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் சேதுபதி, “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதிலிருந்து பின்வாங்க போவதில்லை. படம் வெளியான பிறகு கேள்வி எழுப்பியவர்களுக்குப் பதில் கிடைக்கும். நான் என்ன கதை கேட்டேன் என்பது எனக்கு தான் தெரியும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முத்தையா முரளிதரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “என் மீதுள்ள தவறான புரிதலால் '800' படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்,
ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையைத் திரைப்படமாக்கச் சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டுள்ளன .
நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கும், விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை டேக் செய்துள்ள விஜய் சேதுபதி , “நன்றி வணக்கம்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் 800 படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பிரியா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை