ஐபிஎல் இறுதிப் போராட்டத்தில் சென்னை அணி!


ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்கிற வகையில் இறுதிப் போராட்டத்தில் உள்ள சென்னை அணி, ராஜஸ்தான் அணியைச் சந்திக்க உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தலா ஒன்பது ஆட்டங்களில் விளையாடி மூன்று வெற்றி, ஆறு தோல்வி என்று ஆறு புள்ளியுடன் ஒரே நிலைமையில் உள்ளன. எஞ்சிய ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அந்த வகையில் இரு அணிக்குமே இது வாழ்வா - சாவா போட்டிதான்.

பங்கேற்ற எல்லா ஐபிஎல் தொடரிலும் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்த ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை அந்தப் பெருமையை இழந்து விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சென்னை அணியில் டாப்-3 வீரர்கள் பிளிஸ்சிஸ், வாட்சன், அம்பத்தி ராயுடு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் மிடில் வரிசை தான் சொதப்பலாக இருக்கிறது.

குறிப்பாக கேப்டன் டோனியின் மோசமான பேட்டிங்கே (9 ஆட்டத்தில் 136 ரன்) பின்னடைவுக்குக் காரணமாக அமைகிறது. ஏற்கனவே ராஜஸ்தானுக்கு எதிராக 216 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிபோது 200 ரன்கள் எடுத்து நெருங்கி வந்து சென்னை அணி தோற்றது. இந்தத் தோல்விக்கு பழிதீர்த்து மறுபடியும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் போராடி பணிந்த ராஜஸ்தான் அணியும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் தரமான வீரர்கள் இருந்தும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தள்ளாடுகிறது. முதல் இரண்டு ஆட்டத்தில் ரன்களைக் குவித்த சஞ்சு சாம்சன் அடுத்த ஏழு ஆட்டங்களில் பேட்டிங்கை மறந்து விட்டது போலவே ஆடியுள்ளார்.

அதிரடி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரிடம் இருந்து இன்னும் முழுமையான திறமை வெளிப்படவில்லை. தங்கள் அணியை தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் இவர்கள் ரன்வேட்டை நடத்த வேண்டியது அவசியமாகும்.

இரு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தத்துடன் களத்தில் இறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.

-ராஜ்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.