20க்கு ஆதரவளிக்க மாட்டோம் - ருவன் விஜேவர்தன!ஏகாதிபத்தியவாத ஆட்சியைத் தோற்றுவிக்கத்தக்க அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்க மாட்டோம். மாறாக அதற்கு பூரண எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் மக்களின் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்கு பாராளுமன்றத்திற்கு வெளியிலும் போராடத்தயாராக இருக்கிறோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு பாராளுமன்றத்தில் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்றதன் பின்னரே ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயரிடப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

டி.எஸ்சேனாநாயக்கவின் 136 வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தர்மகித்யராம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்திற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம். மாறாக அந்தத் திருத்தம் தொடர்பில் எமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். நாட்டுமக்கள்வசம் காணப்படும் ஜனநாயகத்தை இல்லாமல்செய்து, ஏகாதிபத்தியவாத ஆட்சியொன்றை ஸ்தாபிக்கும் விதமாகவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தின் பின்னரேயே ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரைப் பெயரிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எப்போதும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதை முன்நிறுத்தியே ஐக்கிய தேசியக்கட்சி அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்திருக்கிறது. அதன்மூலம் அடைந்துகொண்ட வெற்றியை இல்லாமல் செய்வதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்க முடியாது. எனவே அதற்காக பாராளுமன்றத்திற்கு வெளியில் வலுவாகப் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

ஏகாதிபத்தியவாத ஆட்சியைத் தோற்றுவிக்கத்தக்க 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றது. எனினும் எவ்வகையிலும் அதற்கு இடமளிக்கக்கூடாது என்றார். 

Blogger இயக்குவது.