ஐபிஎல் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர்கள்!


ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த மும்பை - பஞ்சாப், ஐதராபாத் - கொல்கத்தா ஆகிய அணிகள் மோதிய இரு ஆட்டங்களும் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர் நடந்தது இதுவே முதல் முறையாகும்.

மும்பை - பஞ்சாப்

நேற்று (அக்டோபர் 19) மாலை 3.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 38 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். அகர்வால் 11 ரன்னிலும், கிரிஸ் கெயில் 24 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா, 3 விக்கெட்டும், ராகுல் சஹர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. இரண்டாவது பந்தில் பூரன் அவுட்டானார். மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்னும் கிடைத்தது. ஆறாவது பந்தில் ரகுல் அவுட்டானார். சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன்னும்,இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும் கிடைத்தது. நான்காவது பந்தில் ரன் இல்லை. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.

இதையடுத்து, இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும்.

ஐதராபாத் - கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனைகளும், சில சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியும் சூப்பர் ஓவரில் முடிந்தது.

இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுல் திரிபாதி 23 ரன்கள் குவித்தார். ஷுப்மன் கில் நிதான ஆட்டம் ஆடி 36 ரன்கள் எடுத்தார்.

நிதிஷ் ராணா 29, ரஸ்ஸல் 9, மார்கன் 34 ரன்கள் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடி 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய ஐதராபாத் அணி கேன் வில்லியம்சன் - பேர்ஸ்டோவை தொடக்க வீரர்களாக ஆட வைத்தது. வில்லியம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். பேர்ஸ்டோ 36, ப்ரியம் கார்க் 4, மனிஷ் பாண்டே 6, விஜய் ஷங்கர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்துல் சமத் அதிரடி ஆட்டம் ஆடி 23 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி சரியாக 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது. 20ஆவது ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி 17 ரன்கள் மட்டுமே எடுத்தது.

போட்டி டை ஆன நிலையில் ஐதராபாத் அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் - பேர்ஸ்டோ களமிறங்கினர். லாக்கி பெர்குசன் வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்தில் வார்னர் டக் அவுட் ஆனார். அடுத்து அப்துல் சமத் களமிறங்கி இரண்டு ரன்கள் எடுத்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய கொல்கத்தா அணி ரஷித் கான் வீசிய சூப்பர் ஓவரில் நான்காவது பந்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் போராடி போட்டியை டை செய்தாலும், சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.

ராஜ்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.