பாராளுமன்ற உறுப்பினர்கள் 223பேரும் பி.சி.ஆர். பரிசோதனையை செய்துகொள்ளவேண்டும் - ஹரீன் பெர்ணான்டோ

 பாராளுமன்ற உறுப்பினர்கள் 223பேரும் பீ.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். அதுதொடர்பில் சபாநாயகர் உத்தரவிடவேண்டும். அத்துடன் பொது மக்களுக்கு தைரியமூட்டும் நோக்கிலே குறித்த பரிசோதனையை நான் மேற்கொண்டேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்ததார்..

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவரத்தன தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகளைத்தொந்து சபை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், ஆளுங்கட்சி உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பரிசோதனை செய்துவிட்டு பாராளுமன்றத்துக்கு வந்திருப்பது அபாயமாகும். அவரை தனிமைப்படுத்தவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் கொவிட் -19 தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை தொடர்பில் எமக்கு திருப்தியில்லை. கம்பஹாவில் அதிகமான பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் தொடர்ந்து மக்களுடன் நெருங்கி பழகுகின்றோம். நாட்டு மக்கள் அனைவரும் பீ.சி,ஆர். பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் அரசாங்கத்தில் இருக்கும் எவரும் இதனை செய்யவில்லை. அதனால்தான் ஏனையோருக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும் இந்த பரிசோதனையில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதற்குமே நான் பீ.சீ.ஆர்.பரிசோதனையை செய்து அதுதொடர்பில் எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். மாறாக எனக்கு தடிமல், காய்ச்சல் எதுவம் இல்லை.

மேலும் அரசாங்கம் இதுதொடர்பில் பொறுப்பற்று செயற்படுவது தொடர்பில் கவலையடைகின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.