மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 7 ஆயிரம் பொலிசார் பணியில்!

 க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாணவர்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 7000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, மாணவர்கள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்குநேர அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலுக்கான அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்திருந்தது. இவற்றை உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக நடத்துவது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் உயர்தர மற்றும் ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படவிருக்கின்றன. ஏனைய சந்தர்ப்பங்களை விடவும் இதுவிடயத்தில் பொலிஸாரின் உயர் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் பரீட்சை மத்தியநிலையங்கள், பரீட்சை தொடர்புபடுத்தல் நிலையங்கள் மற்றும் பரீட்சை வினாத்தாள்களை ஒன்றுசேர்க்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் கண்காப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 7000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதேபோன்று கம்பஹா நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 18 பொலிஸ் பிரிவுகளில் தற்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கின்றது. அவ்வாறு ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் விசேட பரீட்சை மத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியினூடாகப் பயணிக்கும் புகையிரதங்களை அங்குள்ள புகையிரத நிலையங்களில் நிறுத்துவதற்கு நாம் அனுமதி வழங்கியிருக்கவில்லை. எனினும் பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாத்திரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள புகையிரத நிலையங்களில் புகையிரதத்தை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனூடாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சை மத்தியநிலையங்களைக் கொண்ட வெளிமாவட்ட மாணவர்களுக்காக மாத்திரமே இவ்வனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், ஏனையோர் இதனைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

அதேபோன்று பரீட்சை நடைபெறும் திகதிகளில் வெளிமாவட்டங்களிலிருந்து ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளிலுள்ள பரீட்சை மத்தியநிலையங்களுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக அரச பேரூந்துகள் விசேடமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அதனை ஏனையோர் பயன்படுத்த முடியாது. அவ்வாறு மாணவர்களை அழைத்துவரும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரில் ஒருவரை மாத்திரம் வருகைதருமாறு கேட்டுக்கொள்கின்றோம். பரீட்சைகளுக்காக ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் பயணிப்பவர்கள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்குநேர அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பிள்ளைகளை அழைத்துவந்த பெற்றோர்கள், வெளியில் காத்திருக்கும் போது முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்பதுடன் சமூக இடைவெளியைப் பேணுவதும் அவசியமாகும். பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் தாமதிக்காமல் உடனடியாக பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பிள்ளைகளை மாத்திரம் அனுப்பிவைப்பவர்கள் அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவது கட்டாயமாகும் என்றார்.
Blogger இயக்குவது.