ஈ.டி.ஐ. நிறுவன பணிப்பாளர் சபைக்கு எதிராக குற்றவியல் வழக்கு : நிறுவனம் வைப்பாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவிப்பு!

 முறையற்ற வகையில் பணம் திரட்டிய குற்றச்சாட்டின் கீழ் ஈ.டி.ஐ. எனபப்டும் எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு எதிராக குற்றவியல் வழக்கை தாக்கல் செய்யுமாறு அந் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.

தனது பரிந்துரை அடங்கிய அறிக்கையை அந்த குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள நிலையிலேயெ இந்த பரிந்துரை முன்வைக்கப்ப்ட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட குறித்த அறிக்கையில் குறித்த நிறுவனத்தின் வைப்பாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான 08 பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழுவில்,

ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் மற்றும் சிரேஷ்ட வங்கியாளர் டி.எம். குணசேகர ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந் நிலையில் குறித்த நிறுவன பணிப்பாளர் சபை வைப்பாளர்கள் குறித்து சிந்திக்காது, மெத்தனப் போக்காக செயற்பட்டு, பாரதூரமான குற்றத்தை இழைத்துள்ளதாக மூவரடங்கிய குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந் நிலையில் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் பணிப்பாளர் சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு பரிந்துரைத்துள்ள குழு சொத்துக்களை விற்பனை செய்த போது, சட்டங்களை மீறி செயற்பட்டமையூடாக அந்  நிறுவனம் வைப்பாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் , தண்டனை சட்டக்கோவைகளுக்கு அமைய, நம்பிக்கையை சீர்குலைத்தமை, மோசடி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழும் அந்த பணிப்பாளர் சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

' லீசிங் மற்றும் நிதி நிறுவனம் தொடர்பில் நாட்டில் காணப்படும் சட்ட வழு காரணமாக இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்ரன. அதனால் லீசிங் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.' என அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக ஈ.டி.ஐ. நிறுவன மோசடியால் 42,000 வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 32,000 பேருக்கான நிவாரணங்களுக்குரிய திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய 10,000 வைப்பாளர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்கள் தயார் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.