ஐ.நா வில் எடுத்துரைக்கப்பட்ட திலீபனின் தியாகமும் கோரிக்கைகளும்.!🎦

 


ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்


 அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் 29/09/2020 அன்று திங்கள்கிழமை ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 - மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் (Item 5 : Human rights bodies and mechanism - General Debate) தொடர்பான பொது விவாதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் பிரதான அவையில் ஆறு உரைகளைப் பதிவுசெய்திருந்தனர் 

 தென்றல் அமைப்பின் சார்பாக உரையாற்றிய இரமேசு கோவிந்தசாமி அவர்கள் தனது உரையில்; இலங்கை தீர்மானத்திற்கான முக்கிய குழு நாடுகளையும் உடன்படிக்கை அமைப்புகளையும் ஈழத்தமிழ் இன அழிப்பு என்று ஏற்றுக்கொள்ளவும், உலக நடுவர் மன்றத்தில் ஈழத்தமிழர்கள் வாதிட ஆதரவு தரவும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள் என்று ஏற்கவும், இனப்படுகொலை குற்றச் செயல்பாடுகள்மீதும் மனித உரிமை மீறல்கள்மீதும் சிறப்பு அமர்வுகள் நடத்தவும் சிறப்புக் கவனம் எடுக்கவும் அழைக்கின்றோம். 

இங்கிலாந்தும் அதன் உறுப்பு நாடுகளும் தங்களது அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் எவர் என்பதை முழுமையாக மறைத்து ஈழமண்ணில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை முழுமையாக மறுக்கின்றன. ஐக்கிய நாடுகளது சார்லசு பியேட்றி அறிக்கை இலங்கையில் இன அழிப்பில் போர் இடம்பெற்ற இறுதி காலப்பகுதியில் 70, 000 ஈழத்தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் கொலைசெய்யப்பட்டனர் என்று கூறுகிறது. 


தங்களது உறவுகளை இழந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு வழியாக இன்னும் தங்களது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை நடத்த கூடாதென நடுவர் மன்ற கடித்தை கொடுத்து, திருமிகு அமலநாயகியிடம் விசாரணை நடத்தினர். அவரை கடுமையாக மிரட்டி துன்புறுத்தினர். 

2020 ஆம் ஆண்டு ஆகத்து 30 ஆம் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று 8 மாவட்டங்களிலிருந்து வந்த பெண்களை சிறீலங்கா இராணுவமும் காவல்துறையும் தாக்கின. மட்டக்களப்பில் 200க்கு மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.உண்ணாவிரத போராட்டத்தால் தனது இன்னுயிரை ஈகம் செய்த ஈகி திலீபன் நினைவை நினைவுகூற கூடாதென நடுவர்மன்ற ஆணையை அரசியல்வாதிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் 50க்கு மேற்பட்ட மனித உரிமை போராளிகளுக்கும் சிறீலங்கா காவல் துறை நீதிமன்ற ஆணையினை கொடுத்தது. 

எனவே இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தனது உரையில் கேட்டுக்கொண்டார் ஏபிசி தமிழ் ஒலி ( ABC Tamil Oli ) என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய கயீவன் அய்யாதுரை அவர்கள் தனது உரையில்; மனித உரிமை உயர் ஆணையர் 31:1 தீர்மானத்தை நிறைவேற்றுதில் முன்னேற்றமில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல், நீதி, உண்மை ஆகியவற்றை தேடுவதில் சிறீலங்கா அரசு எவ்வித செயல்பாடுகளையும் செய்யவில்லை.இன அழிப்பு குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், துன்புறுத்தல், போர் குற்றங்கள் போன்ற சில உலக குற்றங்களுக்கு மனித உரிமை உயர் ஆணையர் பரிந்துரைத்த உலக கட்டுப்பாட்டை உறுதிசெய்யவேண்டும். 

தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசு மேற்கண்ட குற்;றங்களை செய்தது. தமிழர் பகுதியில் நடைபெறும் இராணுவமயமாக்கலால் 89, 000 கைம்பெண்களும்( விதவைகள்), குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1200 நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். 

சிறீலங்கா பாதுகாப்பு துறை இந்த தாய்மார்களை தொடர்ந்து அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகிறது. தங்களது உறவுகளுக்காக போராடிய தாய்மார்கள் சிலர் இறந்துபோயினர். தற்போது நடைபெறுகின்ற தமிழின அழிப்பு பற்றி கலந்துரையாடல் நடத்த 40:1 தீர்மானத்தின் முக்கிய குழுவையும் பிற உறுப்பினர்களையும் உடன்படிக்கை நாடுகளையும் அழைக்கின்றோம். 

2020 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இனஅழிப்பு நினைவேந்தலையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையும் ஈகி திலீபன் நினைவு நாளையும் நினைவுகூற தடைவிதித்தனர். அதனால், தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் சிறீலங்கா அரசு தவறிவிட்டதால் காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும். இறுதியாக இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவேண்டும் 

என்று தனது உரையை பதிவுசெய்தார். இளம் தமிழ் மாணவர் ( Jeunesse Etudiante Tamoule) என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரபாகரன் அர்சேனித்தா அவர்கள் தனது உரையில்; தமிழீழத்தில் இன அழிப்பு நடந்து 11 ஆண்டுகள் முடிந்த பிறகு தமிழ்ர்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது. மோசமான மாற்றங்களை அடைந்துகொண்டிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கள பேரினவாத அரசால் 1, 46, 000 மேற்பட்ட தமிழர்கள் கொலைசெய்யபட்டனர்.

 வடக்கு கிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் தமிழர் அரசியல் பகுதிகளையும், சமய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, இன அழிப்பு போர் நடைபெற்ற காலத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற தடைவிதிக்கின்றனர். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் தொடர்ந்து தங்களது உறவுகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுகின்ற தாய்மார்கள் சிங்கள பேரினவாத இராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.

 20 ஓகஸ்ட் 2020 அன்று திருமிகு அமலநாயகி அவர்கள் சிறீலங்கா அரசு உருவாக்கிய குண்டர் படையினரால் மட்டகளப்பில் தாக்கப்பட்டார். இதுபோல் சில வாரங்களுக்குபின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கொண்டாடிய பிறகு திருமிகு செல்வராணி தம்பிராசாவை சிறீலங்கா பாதுகாப்பு துறையினர் அழைத்து, விசாரணை நடத்தினர். 

மேலும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட 100க்கு மேற்பட்ட பெண்கள் தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள் சிறீலங்கா இராணுவத்தால் பலவாறு பாதிக்கப்பட்டனர். சிறீலங்கா இராணுவம் தொடர்ந்து முன்னாள் போராளி குடும்பங்களை துன்புறுத்தி வருகின்றது. இன அழிப்பு நடந்து 11 ஆண்டுகள் முடிந்தும் அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ அவர்களது வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் கொடுக்கப்படவில்லை. 

அதனால் உடனடியாக தமிழர் இன அழிப்பு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டுமென்பது தமிழர்களின் நீதியான கோரிக்கை ஆகும் என்று தனது உரையை பதிவுசெய்தார். தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தை அவர்கள் தனது உரையில்; மனித உரிமை ஆணையமும் உடன்படிக்கை அமைப்புகளும் ஈழத்தமிழர்களை இலங்கையில் நடக்கும் சமய இன அழிப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும். 

சமய அழிப்பு என்பது இந்து, கிறித்தவ கோவில்களை அழித்து பௌத்த கோவில்களை நிறுவுவதாகும். தமிழர் மைய்யம் சேகரித்த தரவுகளின்படி 93 கிறித்தவ கோவில்கள் முழுமையாகவும் 186 கோவில்கள் பாதியாகவும் இடிக்கப்பட்டும் 20 கோவில்கள் சிதைக்கப்பட்டும் உள்ளன. 2018 ஆம் ஆண்டு செம்மலையில் உள்ள நீராவியாடி பிள்ளையார் கோவிலை அபகரித்து, பௌத்த துறவி பெரிய பௌத்த கோவிலையும் பௌத்த சிலையையும் கட்டினார். 

அதுபோல இந்து கோவிலைச் சுட்டிக்காட்டுகின்ற அடையாளத்தை அழித்து பௌத்த அடையாளத்தை வைத்தனர். ஓலமடு- வெடுக்கூனரி மலை ஆதி சிவன் கோவிலை பௌத்த பேரினவாதிகள் இராணுவ உதவியுடன் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

அதுபோல திருகோணமலையில் கிண்ணியாவில் உள்ள ஏழு சுடு கிணறுகள் நிறைந்த சிவன் கோவில் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சிங்களமயமாக்குவதற்கு தொல்லியல் துறைதான் முன்னணியில் உள்ள துறையாக வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் கருதுகின்றனர். பௌத்த அடையாளங்கள் உள்ளன என்று கூறி தமிழர்களுடைய நிலங்களை அபகரிக்கின்றனர். 

அமெரிக்க ஒன்றிய நாட்டின் 2016 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு சமய சுதந்திர அறிக்கை தரும் துறை, ‘பௌத்தர்கள் அல்லாத பகுதிகளில் இவ்வாறு தொடர்ந்து பௌத்த கோவில்களை கட்டினால் பௌத்த சிங்கள சமய பண்பாட்டு பேரினவாதம் உருவாகும்’ என்று கூறுகிறது. 

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் உலக நாடுகளையும் இந்த மனித உரிமை பேரவையையும் உலக மனித உரிமை அமைப்புகளையும் இந்த சமய இன அழிப்பை நிறுத்த உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று கேட்கின்றனர் என்று தனது உரையை பதிவுசெய்தார். பிரான்சு தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு(Association Culturelle des Tamouls en France) சார்பாக மீண்டும் உரையாற்றிய பிரபாகரன் அர்சேனித்தா அவர்கள் தனது உரையில்; 

உடன்படிக்கை அமைப்புகளும் ஐநா வின் மனித உரிமை அமைப்புகளும் ஈழத்தில் வாழும் ஈழத்தமிழர்களை பாதுகாக்கவேண்டும். ஏனென்றால் சிங்கள பேரினவாதத்தால் உருவான அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிடம் 5 கோரிக்கைகளை வைத்தது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் அன்று ஈகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைள் பின்வருமாறு:

 1. சிங்கள காலனியாக்குவதன்மூலம் சிங்களர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குடியமர்த்துவதை நிறுத்தவேண்டும்.

 2. ஈராணுவ முகாமிலும் காவல்துறை முகாமிலும் அடைத்து வைக்கப்பட்ட தமிழ அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

 3. அவசரநிலையை திரும்பபெறவேண்டும். 

4. அரசு உருவாக்கிய குண்டர் படையை கலைக்கவேண்டும். 

 5. தமிழர் பகுதிகளில் உருவாக்கப்படும் புதிய காவல்துறை நிலையங்களை நிறுத்தவேண்டும். இந்த கோரிக்கைகளை உள்வாங்கி, அறிவித்து, 23 வது அகவையுடைய ஈகி திலீபன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தது மாபெரும் செயலாகும்.

 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் நீர் அருந்தாமல் 12 நாட்கள் விரதம் இருந்து நமது கோரிக்கைகள் நிறைவேற உயிர்நீத்தார். அவரது இறுதி ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு அகவணக்கம் தெரிவிக்க நிகழ்வுகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு நினைவுநாளை கொண்டாட யாழ்ப்பாண நீதிமன்றமும், முல்லைத்தீவு நீதிமன்றமும் தடை ஆணை பிறப்பித்தன. 

அந்த ஆணையை சிங்கள காவல்துறையினர் கடைபிடித்தனர். அதனால் இந்த பேரவை உறுப்பினர்கள் உடனடியாக சிறீலங்கா அரசுக்கு தகவல் கொடுத்து நினைவு நாளை கடைபிடிக்கும் உரிமையை பசிபிக் அவை வழியாக நிலைநிறுத்தவேண்டும் என்று தனது உரையை பதிவுசெய்தார். 

 ஆப்பிரிக்க உலக தோழமை ( SOLIDARITE INTERNATIONAL AFRIQUE) என்ற அமைப்பின் சார்பாக இரண்டாவது முறையாகவும் உரையாற்றிய திருமிகு கயீவன் அய்யாதுரை அவர்கள் தனது உரையில்; மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் பிராங்கோ தமிழ்ப் பண்பாட்டு பாரதி அமைப்பு வழியாக 39 நாடுகளைச் சேர்ந்த 118 ஐ.நா அங்கீகாரம் பெற்ற (ECOSOC) அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தமிழ்நாடு, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஆகியவையோடு சேர்த்து 3000 தொண்டு நிறுவனங்கள் இரண்டு ஒருங்கிணைந்த அறிக்கைகளை சமர்பித்துள்ளோம். 

அதில் ஒன்றாக எனது தொண்டு நிறுவனம் இருக்கிறது. உலக நடுவர் மன்றத்தில் சிறீலங்காவை நிறுத்த சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க இந்த பேரவையைக் கேட்டுக்கொள்கிறோம். தமிழீழத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்தல், இராணுவ துன்புறுத்துதல், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், மற்றும் பிற செயல்களுக்கு சிறீலங்கா அரசு பொறுப்பு கூறவேண்டும்.

 பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஒரு சிறப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று கேட்கிறேன். தமிழர்களுக்கு நீதி வழங்க சிறீலங்கா அரசு தவறிவிட்டதால் காலம் தாழ்த்தாது முடிந்த நடவடிக்கைளை எடுக்கவேண்டும். 

 *இராணுவத்தால் தமிழர்களின் நிலங்களை அபகரித்து, காலனியாக்குவதை நிறுத்தவேண்டும். 

 *இனப்படுகொலை அரசியலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவேண்டும்.

 *தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விரசாரணை நடத்தவேண்டும். 

 *சுய நிர்ணய உரிமையை ஏற்க பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும். வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை நிறுத்தி, தமிழர்களை மனநிறைவோடு வாழ வழிவிடுங்கள் என்று தனது உரையை பதிவுசெய்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.