சீனாவில் பதப்படுத்தப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்!

 பதப்படுத்தப்பட்ட உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது உகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச சந்தை ஆகும்.

அதன்பின்னர் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பீஜிங் நகரில் உள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தை மூலம் பெருமளவில் பரவியது. இந்த நிலையில், அங்குள்ள கிங்டாவோ என்ற துறைமுக நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, கொத்து கொத்தாக பரவத் தொடங்கியது. இதனால் கவலை அடைந்த அந்த நகர நிர்வாகம், அங்கு வாழும் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தியது.
அந்த பரிசோதனைக்கு பின்னர் கொத்து கொத்தாக பரவல் இல்லை.

ஆனால் தற்போது அங்கு பதப்படுத்தி, உறைய வைக்கப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி உணவுப்பொருள் ‘பேக்கேஜிங்’கின் மேற்பரப்பில் வாழும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல் முறை ஆகும்.

இதை சி.டி.சி. என்று சொல்லப்படுகிற சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது.

சீனாவில் கடந்த ஜூலை மாதம், ஒரு கொள்கலனின் உள்சுவரிலும், ‘பேக்கேஜிங்’கிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறைந்த இறால் இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிங்டாவோ நகரில் பதப்படுத்தி உறைய வைக்கப்பட்டிருந்த உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உணவுப்பொருள் எந்த நாட்டில் இருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த ‘பேக்கேஜிங்’கை தொடுகிறவர்களை கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே சீனாவின் பிரதான பகுதிக்கு வெளியே 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்தது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.