கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக எப்போது கூடியது : ஐ. தே. க. கேள்வி

 நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்தியவுடன் அரசாங்கம் அதனைக்கொண்டு சர்வதேசத்தின் மத்தியில் நற்பெயரைப் பெறுவதற்கு முயற்சித்ததே தவிர, வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் எதனையும் செய்யவில்லை.

அதன் விளைவையே தற்போது மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி கடைசியாக எப்போது கூடியது? இதுவிடயத்தில் சுகாதாரப்பிரிவினருடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் என்ன? செயலணியினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் என்ன? என்பது உள்ளடங்கலாக அனைத்து விடயங்களையும் அரசாங்கம் மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

நுவரெலியாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உலகலாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையொன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதன் விளைவாக இலங்கையும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியேற்படலாம் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

அதுமாத்திமன்றி முகக்கவசங்களையும் செயற்கை சுவாசக்கருவிகளையும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்தும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேலதிகமாக ஒரு பிரிவை ஸ்தாபிப்பது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் அவர் கூறிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியதா என்பது தற்போது மிகமுக்கிய கேள்வியாக மாறியிருக்கிறது.

ஏனென்றால் எமது நாடு கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலைக்கு முகங்கொடுத்ததோடு அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் பாதுகாப்புப்பிரிவுகள் ஒன்றிணைந்து செயலாற்றின. அதில் அடைந்துகொண்ட வெற்றியைப் பயன்படுத்தி நாட்டுமக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் அரசாங்கம் தமது பெருமையைப் பறைசாற்ற முயற்சித்ததே தவிர, வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படும் பட்சத்தில் அதனைக் கையாள்வதற்கான தயார்ப்படுத்தலைச் செய்யவில்லை என்பதை தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைவரங்களின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
Blogger இயக்குவது.