ஊரடங்கு பகுதிகளில் இன்றும் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும்

 தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் இன்றும் காலை முதல் இரவு 08.00 மணி வரை மருந்து மற்றும் உணவு, குடிபானங்கள் விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நேற்றைய தினமும் குறித்த  பகுதிகளில், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு நிலையங்கள் உள்ளிட்ட உணவு, பான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினத்திலும் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதனடிப்படையில், கம்பஹா பிராந்தியத்தின் கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வெலிவேரியா, பல்லேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனி பிராந்தியத்தின் ஜாஎல, கந்தான, பொலிஸ் பிரிவுகளுக்கும், நீர்கொழும்பு பிராந்தியத்தின் திவுலப்பிட்டிய, மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளுக்குள் செல்வது, அங்கிருந்து வெளியேறுவது, அந்தப் பகுதிக்கு பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டக் காலப்பகுதியில் அனைவரும் தத்தமது வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே ஊரடங்கு அமுல் செய்யப்படும் பகுதி மக்களின் நுகர்வுத் தேவைகளை கருத்திற் கொண்டு, உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் நேற்று திறக்க அனுமதிக்கப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், சதொச உள்ளிட்ட கூட்டுறவு நிலையங்கள் இன்றும் திறக்கப்படவுள்ளன.

காலை 8.00 மணிக்கு திறக்கபப்டும் இந்த விற்பனை நிலையங்கள் கண்டிப்பாக இரவு 8.00 மணியாகும் போது மூடப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஊரடங்கு அமுலில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் உணவுப் பொருட்களை அல்லது மருந்துகளை கொள்வனவுச் செய்ய செல்வோர், வீட்டுக்கு அருகே உள்ள விற்பனை நிலையங்களுக்கே செல்ல முடியும் எனவும், தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு சென்றால் அது ஊரடங்கு விதி மீறலாக கருதப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.