ரிஷாத்தை கைதுசெய்தமை மகிழ்ச்சி - ஞானசார!

 


இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை  பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரியது. அரசியல்  காரணிகளை விடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட வித்த்தை போன்றே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் நாட்டில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கி ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை போன்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

பயங்கரவாதி சாஹ்ரான் தொடர்பில் நல்லிணக்கத்தை விரும்பும் பாரம்பரிய முஸ்லிம்கள் ஞாயிறு ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்கள்.

அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதகளினால் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் இப்பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் பொதுபல சேனா அமைப்புக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

காத்தான்குடி பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்களே ஆரம்பத்தில் காணப்பட்டது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Blogger இயக்குவது.