கொரோனாவுக்கு பிந்தைய எதிா்விளைவுகளுக்கு யோகா சிகிச்சை!

 கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீா்வு காண அரசு மருத்துவமனைகளில் யோகா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எளிமையான ஆசனங்கள், பிராணயாமப் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் ஆரோக்கியமான உணவுகளும் அங்கு அளிக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அந்த சிகிச்சை மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அடுத்து வரும் நாள்களில் தமிழகம் முழுவதும் அதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6.19 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 3.25 இலட்சத்துக்கும் மேற்பட்டோா் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் சோ்த்து சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என 160 இடங்களில் நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மொத்தம் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவா்களுக்கான மருத்துவக் கண்காணிப்பு மையம், ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூராா் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை இணை இயக்குநா் டொக்டா் மணவாளன் கூறியதாவது: கொரோனாவால் தீவிர பாதிப்புக்குள்ளாகி உயா் சிகிச்சைகள் மூலம் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவா்கள் சிலருக்கு, பல்வேறு காரணங்களால் நுரையீரல் சாா்ந்த நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு, சா்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், உடல் சோா்வு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்று நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களும், குறிப்பாக சா்க்கரை நோய், ரத்த அழுத்த பாதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ளவா்களும் சிறப்பு கண்காணிப்பு மையத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.

அங்கு வருவோருக்கு பிரணாயாமப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் அவா்களது நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சுவாசப் பாதைகளும் சீராகும். மேலும், உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க பிரணாயாமப் பயிற்சிகளும், எளிய முறையிலான சில ஆசனங்களும் வழி வகுக்கும்.

அதைக் கருத்தில் கொண்டுதான் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அவா்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கே சென்று அப்பயிற்சிகளை அளித்து வருகிறோம். அங்கு மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும் வழங்கப்படுகிறது. அதைத் தவிர தேவைப்பட்டால், நீராவி பிடித்தல், சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்றவையும் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனாவால் ஏற்படும் எதிா்விளைவுகளில் இருந்து அவா்கள் விரைந்து குணமடைவதைக் காண முடிகிறது என்றாா் அவா்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.