விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிக்கியது என்ன?

 மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தங்கத்தினை தேடும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் குறித்த பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறியின் மேற்பார்வையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தனவின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் எதுவும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.