சபாநாயகர் பாராளுமன்ற அமர்வு குறித்து வெளியிட்டுள்ள கருத்து!!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கொரோனா நெருக்கடி காரணமாக அடுத்தவாரம் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நவம்பர் 03ஆம் திகதி இடம்பெறும் பாராளுமன்ற அமர்வு முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் முன்னெடுக்கப்படும்.
அன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அத்துடன் 2020 நிதியாண்டின் சேவை செலவுகளுக்காக நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஓதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்விக்கு நேரம் ஒதுக்கப்படாது.
அதேநேரம், பாராளுமன்றம் கூடும் தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவிர வேறு எவரும் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்காதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊடகப் பிரதிநிதிகளும் பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு பாராளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அத்துடன் அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வுகள் நவம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை இடம்பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை