பிரியாணியின் பூர்வீகம் எது தெரியுமா!!


 இன்றளவில் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அசைவ பிரியர்கள் மட்டுமல்ல, சைவர்களும் பிரியாணி மசலாக்களில் சொக்கிப் போவது இயல்பான ஒன்று. இந்த மசாலாக் கலவை தோன்றியது இந்தியாவில்தான் என்கின்றனர் சிலர் ஆய்வாளர்கள். ஆனால் பிரியாணியின் பூர்வீகம் உறுதியாக இந்தியாவே அல்ல.


பிரியாணி பெர்சியர்களின் பூர்வீக உணவாக இருந்தது என்று ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். சில ஆய்வுகள் இந்த உணவு பாரசீகர்களின் உணவாக இருந்து அவர்களின் வணிக நடவடிக்கைகளினால் தெற்காசிய நாடுகளில் புழங்க ஆரம்பித்தது எனவும் குறிப்பிடுகின்றன. எது எப்படியோ முகலாயர்களின் ஆட்சி காலத்திலேயே இந்த உணவு இந்தியாவிற்கு பழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அன்றைக்கு பெரும்பாலான முகலாயர்களின் விருப்பமான உணவுகளில் பிரியாணியும் இருந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.
பட்டை, இலவங்கம், ஏலம், பிரியாணி இலை, மிளகு, அன்னாசி மொக்கு என பிரியாணிக்கு அத்யாவசியப் பொருட்களான இந்த கலவை இந்தியாவில் உருவானதாகக் கூறப்படுகிறது. இப்படி ஆரம்பித்த பிரியாணி கலவை இன்று உலக நாடுகளில் பெரும்பாலும் விரும்பப்படும் உணவாக மாறிவிட்டது. பிரியாணி- பெர்சிய மொழியில் இருந்து உருதுக்கு மாறின சொல் என்று சிலர் கருதுகின்றனர். இதைத் தவிர வறுத்த எனும் பொருள்படும் பார்சி மொழியின் கூறு எனவும் சிலர் கூறுகின்றனர்.


ஆனால் நமது சங்க இலக்கியத்திலும் இதேபோன்ற ஒரு சொல் இருப்பதை நாம் புறம் தள்ளிவிடக் கூடாது. அந்தச் சொல் ஊன்சோறு. இந்த உணவை அரிசி, நெய், மிளகு, புன்னை இலை, இறைச்சி எல்லாம் ஒன்றாக போட்டு சமைப்பார்களாம். எது அரிசி, எது இறைச்சி எனக் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு நெய்யை ஊற்றி சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அவர்கள் பயன்படுத்திய இறைச்சி வகைக்கு அளவே இல்லை என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் அது சிக்கலுக்குரியதாக மாறிவிட்டது. ஆக ஊன்சோறு, ஊன்துறை அடிசில் என்ற பெயர்களில் நாமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரியாணி போன்ற ஒருவகை உணவை சாப்பிட்டு இருக்கிறோம்.


1398 இல் மங்கோலிய மன்னன் தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்த போது அவனுடைய போர்வீரர்களுக்கு சமைத்து கொடுக்கப்பட்ட உணவுதான் இது என்றொரு வரலாற்று குறிப்பு இருக்கிறது. அதேபோல கடல் மார்க்கமாக கேரளாவிற்கு வந்த பெரும்பாலான வணிகர்கள் இந்த வகை உணவுகளை சமைத்துச் சாப்பிட்டு இருக்கின்றனர். அவர்கள் மூலம் இந்தியாவிற்குள் பரவியருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
பிரியாணியைப் பற்றி இன்னொரு சுவாரசியக் கதையும் உண்டு. ஷாஜஹான் மன்னனின் மனைவி மும்தாஜ் ஒருமுறை போர்வீரர்களைப் பார்த்தபோது அவர்கள் உடல் மெலிந்து இருப்பதைப் பார்த்து அவர்களுக்காக அரிசியோடு இறைச்சியைச் சேர்த்து இந்த உணவை உருவாக்கினார்கள் என்று கூறப்படுவதும் உண்டு. ஆனால் எந்த முஸ்லீம் மன்னின் கைவண்ணத்தால் இது பிரசித்து பெற்றதோ பின்னாட்களில் ஹைத்ராபாத் நிஜாம், நாவப்களின் விருப்பமான உணவாக இது மாறியிருக்கிறது.


லக்னோவை ஆண்ட நவாப்கள் பிரியாணியை அதிகமாக உண்டதாகவும் அதிலும் அவாத்தி எனும் பகுதியில் சமைக்கப்பட்ட உணவுதான் பூர்வீக பிரியாணி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியின் பூர்வீக மொழி அவா. இந்த மொழியின் பெயரே பின்னாளில் ஆவாதி பிரியாணி என மாறியதாகவும் கூறப்படுகிறது. நாம் இன்றைக்கு சமைக்கும் பிரியாணி போல இந்த உணவு இருக்காது. அரிசியை தனியாகவும், மசலாக்களோடு இறைச்சியைத் தனியாகவும் வேகவைத்து பின்னர் பெரிய பாத்திரத்தில் அடுக்கடுக்காக பொருட்களை வைத்து மீண்டும் சமைக்கப்படும் உணவுதான் பூர்வூக ஆவாதி பிரியாணி.
பின்னாட்களில் இந்த உணவுமுறை முற்றிலும் மாறிவிட்டது. டெல்லி பகுதியில் இருந்து முகல் பிரியாணி என்று மற்றொரு வகையும் உருவாகி இருக்கிறது. மைசூர் திப்பு சுல்தான்கள் இந்த பிரியாணி மசலாக்களை வைத்து சைவ உணவாக தாகிரி பிரியாணி எனும் உணவை உருவாக்கினர். அதேபோல ஹைத்ராபாத் நிஜாம்கள் இந்த உணவை ஹைதராபாத் பிரியாணி என்றே மாற்றி இருக்கின்றனர்.


நமது தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, வேலூர் பிரியாணி என்று இருப்பது போல இந்த பிரியாணி கலவையும் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு ஏற்பவும் அவர்களின் ரசனைக்கு ஏற்பவும் உலகம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் கொண்டாட்ட உணவாக இருக்கும் இந்த உணவு முறைக்கு இன்று சிறப்பு தினம். அதாவது உலக பிரியாணி தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இந்த நாளில் ஆவிப் பறக்க அதன் வரலாற்றையும் சற்று அசைபோடுவோம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.