தனிமைப்படுத்தப்பட்டார் ரவூப் ஹக்கீம்!

 


20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அரசியல் பூகம்பம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தவ்பிக் ஆகிய 04 உறுப்பினர்கள் 20ஆவது திருத்த யோசனைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள்.


இந்நிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத கட்டத்திற்கு காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரியவருகின்றது.


குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக பொறுப்புக்களும் அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டுள்ளன.


அதுமட்டுமல்லாமல், முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகவும் தெரிவாகிய வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு தமிழ் பிரதிநிதிகளின் கைகள் ஓங்கியெழுகின்ற நிலையில், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த குறித்த 4 முஸ்லிம் உறுப்பினர்களின் தீர்மானத்தினால் கிழக்கு மாகாணத்தில் காங்கிரஸின் அத்திவாரம் அசையத் தொடங்கியிருப்பதை ரவூப் ஹக்கீமுக்கு பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்கு எதிராக அக்கட்சி ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளது.



மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்துகொண்டு கட்சியின் தீர்மானத்தை மீறி 20 ஐ ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயங்களை ஹக்கீமுக்கு கோடிட்டுக்காட்டியுள்ள தாருஸ்ஸலாம் பிரதிநிதிகள், எடுத்தவுடனே ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது உறுப்புரிமை நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.


இந்த நிலையில் கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலையில் குழப்பகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.