மனைவியாக மட்டும் - சிறுகதை - முனைவர் பி. வித்யா!!


 “ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா! மன்னிப்பாயா!”


காற்றில் மேலெழுந்து இன்னிசையாய் மனதை வருடிக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் சினிமாவில் பாடியவரை விடவும் அழகாக நளினங்களுடன் பாடிக் கொண்டிருந்தாள் காவ்யா. கேட்பவரை மயங்க வைக்கும் அந்தக் குரல் அந்த அறையைத் தாண்டி பிரவகித்தது அவள் மனதைப் போல,


காவ்யா பெயருக்கேற்றபடி அவள் கண்களைப் பார்த்தே பல நூறு காவியங்களைப் படைத்திடலாம். கேரளத்துப் பேரழகிகள் பிச்சை கேட்கும் பேரழகி. மைதீட்டிய விழியில் நடனமும், நாடகமும் ஒருங்கே காட்டுவாள். செயலில் வேகமும் விவேகமும் ஒரு சேரப் பிரதிபலிக்கும் அற்புதப்பெண். 37 கடந்திருக்கும் வயது. ஆனாலும் பார்ப்பதற்கு 23 வயதைத் தொட்ட மோகினி என்றே சொல்லத் தோன்றும் அனிச்சப் பூ அவள்.


புத்தகமும், பாடல்களும், ஒரு சில நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளுமாய்த்தான் அந்த அறை நிரம்பி வழிந்தது. அவள் தினமொரு பாடத்தை அருகிருப்பவர்களுக்கு நடத்துபவளாகவே இன்றும் இருக்கிறாள். ஆனாலும், அந்தத் தேவதையின் கால்கள்… தேவதைகளுக்கு இறகுகள் போதும் என்பதாலோ என்னவோ அவளின் கால்கள் முடக்கப் பட்டிருந்தது. அறைகளில் உலாவக்கூட ஏதோ ஒரு துணை தேவைப்பட்டது. ஏதோ ஒன்றின் பலத்தினால்தான் தேவதையால் இம்மண்ணில் கால் பதிக்க முடிந்தது.


இது திடீரென வந்த நிலைதான். 23 வயதில்தான் அவளுக்கு இவ்வாறு நிகழ்ந்தது. நிர்வாகப் படிப்பு படித்து முடித்து நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஓர்நாளில் கீழ்த் தளத்திற்கு மின்தூக்கியில் போய்க் கொண்டிருந்தவள், கை கால்களை திடீரென அசைக்க முடியாமல் கீழே விழுந்தாள். விழுந்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கால்கள் தன் செயல்பாட்டைக் குறைத்துக் கொண்டது. கைகள் அவ்வப்போது அவசரத்திற்கு தொந்தரவு தர ஆரம்பித்தது. அது ஆயுள் முழுதும் அவ்வாறே தொடரப்போகிறது என்று அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


இரண்டு ஆண்டுகள் கட்டில் வாசம், மாத்திரைகள், ஊசிகள், மருந்து பாட்டில்கள் என்று அதோடு புலங்கிப் புலங்கித் தன் வாழ்க்கையையே விட்டுவிடத் தயாரானாள் அந்தத் தேவதை.


தனக்குத் தரும் மாத்திரைகளில் ஒரு பத்து மாத்திரைகள் முழுவதுமாக விழுங்கி நிரந்தர விடியலுக்குள் போகலாம் என மனதில் முடிவெடுத்துத் தயாரானாள். ஆனால் அவள் நிலையை என்னவென்று சொல்வது ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. மற்றொரு கையோ செயலற்றுப் போய்க் கிடந்தது. இறப்பதற்கும் இன்னொருவர் தேவை என உணர்ந்த தருணம் மரணத்தை விடவும் ரணமாய் இருந்தது அவளுக்கு.




கொஞ்சம் கொஞ்சமாய் தலையையும் பிடறியையும் தாழ்த்தி, முதுகினை அழுத்தி மெல்லிய புழு போல நகரத் தொடங்கினாள். ஒரு கால் மணி நேர முயற்சிக்குப் பின் தான் மேசையிடமே அவளால் வர முடிந்தது.


குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த கையில் நகர்ந்ததால் இரத்தம் வெளியாகத் தொடங்கியிருந்தது. இடதுபுற மேசையைத் தடவி மாத்திரைகளை எடுத்து வாயில் போடவும், அம்மா கமலா உள்ளே வரவும் சரியாக இருந்தது.


“அடி நாம் பெத்த மகளே! என்ன காரியம் செய்ய துணிஞ்ச, எங்களத் தனியா விட்டுட்டுப் போகலாமுன்னு நெனைச்சியா? நானும் உங்கப்பாவும் ஒங்கூடவே வர்றோம் எல்லாரும் செர்ந்தே செத்திரலாம்” என்று தன் பிள்ளையைப் பார்த்து அழுது மன்றாடிக் கண்ணீர் விட்டாள் கமலா.


“அம்மா என்னால முடியல. கனவுல கூட இந்த நாலு சுவர்தான் எந்திரிச்சுக் கூட நடக்க முடியாத ஊனப் பெண் உனக்கு வேண்டாம்மா! நரக வேதனையாயிருக்கு. என்னச் சாகவிடும்மா!” என்று தேம்பித் தேம்பி காவ்யா சொன்னதை, கமலாவால் தாங்கவே முடியவில்லை.


“உனக்கு நாங்க இருக்கோம் கடைசி வரைக்கும் கவலப்படாத, நானும் அப்பாவும் இருக்கற வரைக்கும் எதுக்கும் நீ கலங்கக் கூடாது. நீ என்ன பிரச்சனைனாலும் சொல்லு என்னால என்ன முடியுமோ அம்மா உனக்குச் செய்யுறேன்”னு அழுதபடி அம்மாவும் அப்பாவும் சொல்லவும் ஒரு வழியாகச் சமாதானம் ஆனாள்.


ஆனால், ஒவ்வொருநாளும் அவள் முன்னே பெரும் சவாலாக விடிந்தது. மிக இலகுவாய் சாதாரணமாய் தனக்குக் கீழிருப்பவர்களை வழிநடத்தி வேலை வாங்கும் பெண்ணவளின் அங்கக் குறைவு அன்றாட வேலைகளைச் செய்யவும் போராட வைத்தது.


ஒரு நாளில் எத்தனை முறை விழுவது எழுவது அதுவே பழக்கமாகவும் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் தன் வெறுமையின் வெற்றிடத்தில் மகிழ்ச்சிப் பூக்களை நிரப்பத் தொடங்கி இருந்தாள். அப்பொழுதுதான் அவனின் அறிமுகம் கிடைத்தது.


வசந்த் அவன் பெயருக்கேற்றார் போல சிறிது வசந்தகால காற்றை அவளுக்கு அனுபவிக்க அவன்தான் பரிசளித்தான். கணினியின் வாயிலாக அறிமுகம், கொஞ்சம் கொஞ்சம் அறிவின் தேடல், அனுபவங்களின் பகிர்வு என்று அன்பு அன்யோன்யம் வரை சென்றிருந்ததை இப்பொழுதுதான் இருவருமே உணர ஆரம்பித்தார்கள்.


கொஞ்சம் கொஞ்சமாய் காவ்யாவின் மனதில் இடம் பிடித்தவன், அவள் மனதில் முதலிடம் பிடிக்கத் தொடங்கி விட்டான். அவனின் குறுந்தகவலின்றி ஒரு நாளும் விடியாது என்பதாக மாறிவிட்டது நிலை.


ஆயினும் தன் இயலாமை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சின்ன இடைவெளியைக் கடைபிடிப்பாள். பின் எப்பொழுது அந்த இடைவெளி நிரம்பியது என்று இருவருக்கும் தெரியாது. ஏதேதோ பேசிக் கொண்டிருத்துவிட்டு, சிறிது மௌனம் காத்த பின்தான் கைபேசியை அணைப்பார்கள்.


அவன் கேரளவன் என்பதாலோ என்னவோ? தன் காதலை காதலியிடம் சொல்ல ஓணத்தைத் தெர்ந்தெடுத்தான்.


ஒரு வழியாகத் தட்டுத் தடுமாறி காதலைச் சொன்னதுதான் தாமதம், அதுவரை மகிழ்வோடு பேசிக் கொண்டிருந்த காவ்யா, அடுத்து என்ன பேசுவதெனத் தெரியாமல் மௌனமானாள். இதற்கு முன்னமே அவன் பேச்சில் சில இடங்களில் தன்னை அவன் விரும்புவதை அறிந்தே வைத்திருந்தாள். அவனுக்காகத்தான் தான் கேரள உடைகள் தரித்து புகைப்படங்களை பதிவிடுகிறாள். தன்னை அவன் கவனிப்பதாலேயே அவள் அழகாய் மாறுவதை சில நேரங்களில் தன் கண்ணாடியில் கவனித்திருக்கிறாள்.


அவனை நினைக்கும் போதே சிறு புல்லரிப்பொன்று உள்ளூரப் பாய்ந்து கன்னங்களை பல நாள் சிவக்கச் செய்திருக்கிறது. ஆனால் நேரடியாக அவன் வார்த்தையில் சொல்லிவிட்டதும், காதலை முழுமையாக ஏற்றுக் கொண்டு சம்மதித்திட மனம் மசியவில்லை, அதனாலே அவன் பேசியும் வார்த்தைகள் வராமல் கண்களும் ஓரிடத்தில் நில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.


என்ன செய்ய? உடலின் குறை தவிர வேறொன்றும் குறையில்லை என்று நினைத்திருந்தவளிடம், அப்பொழுதுதான் அம்மா ஒரு பேரிடியை இறக்கிவிட்டுச் சென்றிருந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவளுக்கு வசந்த் தந்தது இன்னொரு அதிர்ச்சி.


ஆசையோடு சொல்லும் இவனிடம் எப்படிச் சொல்வது? தாம்பத்தியத்திலோ, குழந்தைப் பிறப்பிலோ இல்லறத்திலோ பங்கு கொள்ள முடியாத அபலை நான் என்று, மனதில் உருகிக் கொண்டிருந்தாள். சில நேரம் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத சில விசயங்களைக் கூட அவனிடம் சொல்லிருக்கிறாள். ஆனால் இந்த விசயத்தை… அவளால் சொல்லவே முடியவில்லை. இது நடந்து மூன்று மாதங்கள் இருக்கும் அவன் அழைப்பை அவள் ஏற்கவேயில்லை, பதிலும் சொல்லவில்லை. என்னை வெறுக்காதே! புறந்தள்ளாதே! எனக்கு பதிலேனும் சொல்! எனும் பல குறுந்தகவல்களின் பின்னே மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனிடம் பேசத் தயாரானாள்.


பேச்சை இப்படியாக ஆரம்பித்தாள், “உனக்கு என்னைப் பற்றி முழுதாகத் தெரியாது… என்னால் சிறு குழந்தையின் தொடுதலையும்… குழந்தையின் சிறு முத்தத்தையும் கூடத் தாங்க மாட்டேன் என்று உனக்குத் தெரியுமா...?” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.


“அதனாலென்ன மருத்துவரைப் பார்க்கலாம்” என்றான் அவன். இவள் எப்படித்தான் புரிய வைப்பாள் அவனுக்கு, கண்களில் நீர் சுரப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்ப ஆரம்பித்ததும், சில நொடிகளில் கன்னங்களும் அவளது நுனி மூக்கும் உடனே சிவக்கத் தொடங்கி விட்டது. ‘முத்தம் கொடுத்தால் கன்னம் சிவந்து ஒவ்வாமை தோன்றும் என்று இவள் சொன்னால்’ மருத்துவரைப் பார்க்கலாம் என்று தான் நேசிக்கும் காதலன் சொல்லும் பதிலுக்கு இவள் என்னதான் சொல்ல முடியும்?


மனதை ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் சொல்லத் தொடங்கினாள், “ நான் ஒத்துக்கிறேன்னே வச்சுக்கோ அடுத்து என்ன? என்று இவள் கேட்டதும் குதூகலமாகிப் பதிலளித்தான்,


“கல்யாணந்தான்”


“அடுத்து”


குழந்தை… குட்டின்னு… அவன் சொல்லி முடித்ததுதான் தாமதம். அவள் கொஞ்சம் நிதானமாகப் பேசத் தொடங்கினாள்.


“என்னால அந்த சந்தோசத்த எல்லாம் தர முடியாது… தாம்பத்யம் குழந்தை இதெல்லாம் இந்த உடம்பு தாங்காது”


“… … … … … …”


“யோசிச்சுக்கோ. உன் உடம்புல ஒரு குறையும் கெடையாது. என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா சாதாரண விசயத்துக்குக் கூட ஏங்க வேண்டி வரும். இந்த வாழ்க்கை எனக்குப் பழகிடுச்சு. ஆனா உன்னால அந்த வாழ்க்கைய தாங்கிக்க முடியாது” என்று ஏதோ சொல்ல நினைத்து ஒருவழியாகச் சொல்லி முடித்தாள்.


அவனும் நிறுத்தி நிதானித்து பரவாயில்லை. “என்னோடு என் வாழ்க்கை முழுவதும் நீ இருந்தால் மட்டும் போதும்” என்று கூறவே, காவ்யா சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கிவிட்டாள். ‘கஷடத்தையெல்லாம் சிரிச்சுத்தான் ஆத்தணும்பாங்க பெரியவங்க’ அதுபோல அந்த ரண களத்தில் அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.


பிறகு, “நீ என்ன சொன்னாலும் நமக்குள் காதலோ? திருமணமோ? வேண்டாம் என்று சொல்லி விட்டு கைபேசி இணைப்பைத் துண்டித்தாள். 5 வருடங்களுக்கும் மேலாக அவனைத் தெரியும், அவனோடு பேசாத இந்நாட்கள் யுகத்தை விடவும் நீண்டதாய், அவளைச் சுற்றிய அந்த நான்கு சுவர்களும் தன் கழுத்தை நெறித்து மூச்சு முட்டச் செய்வதாய் உணர்ந்தாள்.


அவனாக வேறொரு நாளில் மீண்டும் அழைக்கவும், தாங்காத் துயரத்தால், அவனது குரலையாவது கேட்க வேண்டும் எனும் ஆவலில் எடுத்து விட்டாள். “ சரி பழைய விசயங்களைப் பற்றி மீண்டும் பேச மாட்டேன். பழைய மாதிரி நாம் நண்பர்களாகவாவது இருப்போமே? மன்னித்துக் கொள் உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க இயலவில்லை என்று அவன் தழுதழுத்த குரலில் சொல்லவும், இங்கும் அதே நிலைதான் என்று அவள் உள் மனம் கதறிக் கொண்டிருந்தது.


“சரி பேசலாம்” என்றாள்.


“ஆனால் ஒரே ஒரு வார்த்த மட்டும் சொல்லிடு காவ்யா ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.


“… … … சரி கேள் சொல்றேன்” என்று சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவளுக்கு.


“காவ்யா நம் திருமணத்தைப் பற்றியோ, என் காதலைப் பற்றியோ, இனி எப்போதும் பேசவே மாட்டேன். எனக்கு ஒரு பதில் மட்டும் சொல்லிப் போ?” என்றான்.


காவ்யாவிற்கு மனதிற்குள் ஒரு தடுமாற்றம் இருந்த போதும், அரை மனதோடு “சரி கேள்” என்றாள்.


“… … … நீ … என்னை… . விரும்பினாயா? இதற்கு மட்டும் பதில் சொல்லேன் என் மனம் வெடித்துவிடும் போலிருக்கிறது. என்னால் தாங்க முடியாத வலியைத் தருகிறது இந்தப் புதிர்...” என்றான்.


“அது… வந்து… என்ன சொல்ல?” என்று அவள் வார்த்தையைத் தேய்த்துக் கொண்டிருக்கவும்,


‘இன்றேனும் பதில் சொல்லேன்” என்று அவன் பிரார்த்தித்திருக்க வேண்டும் அவன் உதட்டசைவை பார்க்காத போதும் இவளால் உணர முடிந்தது.


“ப்ளீஸ் சொல்லு சொல்லு….” என்று அவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.


“ஆமாம்… அதிகமாக, நீ என்னை நேசிப்பதை விடவும் அதிகமாக நான் உன்னை நேசிக்கிறேன்” என்று உணர்வற்று சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். நீ இதைப் பலநாள் எதிர்பார்த்துத் தவம் கிடந்தாய் என்று எனக்குத் தெரியும் ஆனால் இந்த என் காதல் வெற்றியில் அதாவது திருமணத்தில் முடியப் போவதில்லை. ஆகவே அப்பேச்சை இதோடு நிறுத்திக் கொள்ளலாம்” என்று சொல்லி முடித்து பெரு மூச்சொன்றை விட்டாள்.


பின் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும், ‘நீ என் மனைவியாக உடன் இருந்தால் மட்டும் போதும். அப்படிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்’ என்று கூறியும் அவள் இறுதி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை.


அதனால்தானோ


“வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்

மன்னிப்பாயா! மன்னிப்பாயா!

மன்னிப்பாயா!”


என்று பாடும்போது காவ்யாவிற்கு இப்பொழுது கண்கள் குளமாகியிருந்தது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.