அண்ணன் விஜய் சேதுபதிக்கு அயல் தேசத்தில் இருந்து ஒரு மடல்!!

 


அண்ணனுக்கு அன்பு கனிந்த வணக்கங்கள்.........

அயல் தேசத்து உங்கள் தொப்புள் கொடி உறவான தாயக தமிழிச்சியான நான் எதனை எழுதப் போகிறேன் என்பது தங்களுக்குப் புரிந்திருக்கும்,  எத்தனையோ திரை உலகப் பிரபலங்கள் சொல்லிவிட்ட பின்னரும் தங்கள் மௌனம் கண்டு, உயிர் துடித்து, மனம் பதறி இம்மடலை தங்களுக்கு வரைகிறேன், 

தேர்ந்த நடிகனான உங்களுக்கு, ஒரு விடயத்தை முதலில் சொல்ல விரும்புகிறேன், அச்சு அசலான உங்கள் பிரமாதமான நடிப்பிற்கு என் பாராட்டு. தவிர நான் உங்கள் ரசிகையும் ஆவேன். 

கிராமத்து மணம் கமழும் உங்கள் வார்த்தைக் கோர்ப்பில் சொக்கிப் போவதுண்டு, அத்தோடு, யாருடைய பாணியையும் பின்பற்றாத உங்கள் தனித்தன்மை மிகப்பிடித்தம். 

அயல் தேசத்தது உறவுகளாகிய நாங்கள் அனுபவித்த துயர் தாங்கள் அறியாதது அல்லவே, 2009 இல் குருதி கொப்பளிக்க நாங்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழகத்தில் கண்ணீர் வடிக்காத உறவுகள் இருக்க வாய்ப்பேதும் இல்லை. அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது அண்ணா, ?

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா, சிறியதொரு நிலப்பலப்பிற்குள் பாதுகாப்பு என்ற பெயரில் அடைககப்பட்ட நாங்கள் , தப்பிச் செல்ல வழியேதுமின்றி அவலக்குரல் எழுப்பினோம், 


குண்டுமழையில் குருதி கொப்பளிக்க, மாண்டுவிட்ட தாயிடம், முலையில் பால் பருகிய பிஞ்சு ஒன்றின் ஆற்றொணா துன்பத்தை நீங்கள் படங்களிலேனும் காணவில்லையா, பச்சைக் குழந்தைகள் பசியில் துடித்தபடி, கஞ்சிக்கு வரிசையில் நிற்க, வான் வழி குண்டெறிந்து கொன்ற அவலத்தையேனும் எண்ணிப் பார்க்கவில்லையா நீங்கள்......

மடியில் இருந்த குழந்தை, தாயின் கண்முன்னே, பொக்கைவாய் சிரிப்போடே செத்துப் போன துயரும் எங்களிடம் உண்டே......

பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, இன்று வரை வீதிவீதியாய் அலைந்துகொண்டிருக்கும் அன்னையரின் கொடிய துயர் இன்னமும் மறையவில்லையே, 

நாங்கள் அள்ளிக் கொடுத்தது பணம், நகையை இல்லை அண்ணா, பவித்திரமான உயிர்களை.......

ஆண்டுகள் சில ஓடிவிட்ட போதும், அழுத கண்ணீர் இன்று வரை காயவில்லை எங்களுக்கு, 

நினைவின் வடுக்கள் எங்கள் உயிர் உள்ளவரை ஒட்டிக் கொண்டேதான் இருக்கும், 

தமிழர்களாகிய எங்களின் மரணத்தவிப்பை, உயிர்த்துடிப்பை, கைதட்டி கொண்டாடிய ஒருவர்தான் முத்தையா முரளிதரன். ஒரு விளையாட்டு வீரனாக அவர் வெற்றி பெற்றிருக்கலாம், அனால் காலகாலமாக தமிழ் மக்களின் மனங்களில் அவர் அருவருக்கத்தக்க, ஒருவரே.....


முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து தமிழ் மக்களின் மனங்களில் இருந்து தெரிந்தேவிழுந்து விடாதீர்கள், அது உங்கள் திரைஉலக வாழ்வின் மாபெரும் தவறாகவே அமையும்... 


உங்களிடம் சொல்லத்தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன்.....உங்கள் முடிவை உலகத் தமிழினமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது......


இப்படிக்கு,

அயல்தேசத்து தங்கை. 


தமிழரசி

தமிழருள் இணையதளம். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.