தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் குடும்பபெண்கள்!


நமது நாட்டிலே குடும்பங்களை பிரிந்து அதிகளவான பெண்கள் தொழில் நிமிர்த்தம் காரணமாக மத்தியகிழக்கு சென்று அங்கே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இன்று வளைகுடா நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் அதிகமானோர்களில் கணவனை இழந்தவர்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், கணவனால் விவாகரத்துப் பெற்றவர்களும், வயதுவந்த பெண்களைப் வைத்துக் கொண்டு அவர்களை கரை சேர்க்க முடியாதவர்களும், கணவன் இருந்தும் அவரது கையாலாகத்தனத்தின் காரணமாக குடும்ப சுமையை சுமந்த வீ்ட்டுத் தலைவிகளும், குடும்பத்தால் கவனிக்கப்படாதவர்களும் மற்றும் கணவன்மார்களால் வழியனுப்பி வைக்கப்பட்ட பெண்களுமே அதிகம் அதிகமாக இன்று வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள்.

தங்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள, தங்களது குடும்பங்களை அதிலிருந்து மீட்டுக் கொள்ள அவர்கள் வெளிநாட்டு மோகத்துக்கு ஆட்பட்டு அங்கே சென்று பல இன்னங்களைச் சந்திப்பதுடன், உயிர்களையும் பறிகொடுக்கின்றார்கள்.

வெளிநாடு செல்லும் பெண்கள் யாரும் அங்கே ராணி போன்று நடாத்தப்படுவதில்லை காசு கொடுத்து வாங்கிய அடிமையாகவே நடாத்தப்படுகின்றார்கள். நிறைய நம் நாட்டுப் பெண்கள் ஊதியம் வழங்கப்படாமல் பல வருடங்களாக உடல், உள ரீதியாக பல சித்திரவதைகளையும் அனுபவித்துக் கொண்டு எந்த வித பொருளாதார முன்னேற்றமும் இன்றி சென்றதை விடவும் படுமோசமாக அவலப்பட்டுத்துத்தான் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

வீட்டு வேலைகளுக்காக வெளிநாடு செல்கின்றவர்கள் பெண்கள் என்ற ரீதியில் அவர்கள் பாலியல் ரீதியாகவே அதிகமாக துன்புறுத்தப்படுவதுடன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்படுகின்றார்கள், கஷ்டப்படுகின்றார்கள், வாழ்க்கையில் நஷ்டப்படுகின்றார்கள்.

சில ஆண்கள் தங்களது மனைவியர்களின் சம்பாத்தியத்தில் உண்டு குடித்து வாழ்வதற்காக மனைவிமார்களை வெட்கமில்லாது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களின் கற்பை சந்தேகிக்கின்றனர்.

இது போன்ற உழைத்து தனது மனைவியை காப்பாற்ற வக்கில்லாத ஆண்மையற்ற கணவன்மார்கள் தங்களது மனைவிமாரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு அவர்களது கற்பைப் பற்றிக் கவலைப்பட அருகதையற்றவர்கள்.

பல கணவன்மார்கள் இவ்வாறு தனது மனைவிமாரை சந்தேகப்பட்டு அவர்கள் வெளிநாட்டில் இருக்கத் தக்க ஊரிலே வேறு திருமணங்கள் செய்துள்ள சம்பவங்களும் ஏராளம்.

வெளிநாடுகளுக்கு நம் பெண்கள் செல்வதையிட்டு நம் சமூகத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேரும் இது விடயத்தில் அதிகம் அதிகமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

எங்களது வீட்டில் இருந்து யாரும் வெளிநாடு செல்லவில்லை ஆகவே நாங்கள் ஏன் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று வெளிநாடு செல்லும் பெண்கள் விடயத்தில் நாம் சுயநலமாக இருந்து விட முடியாது.

ஒரு பெண் பிழைப்புக்காக பல ஆயிரம் மையில் கடந்து தனித்துச் சென்று அடிமை போல் செல்கிறாள் என்றால் அவளது குடும்பத்தில் உள்ள ஆண்வர்க்கமும், அவள் செல்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமூகமாகிய நாமும் வெட்கித்தலை குணிய வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றுசானா நபீக் தொடக்கம் அங்கே அவலப்படும் அத்தனை பேருடைய சாபத்துக்கும் அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் செல்வதை தடுக்க முற்படாதிருந்த அந்தந்த சமூகமே பொறுப்புக் கூற வேண்டும்.

ஒரு பெண் ஆண் துணையின்றி தனித்து எங்கும் செல்வதை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. அப்படியிருக்கையில் நம் பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் வெளிநாடு செல்கிறாள் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண்களும், அந்தப் பிரதேசத்து உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்களும் ஏன் அனுமதிளிக்கிறார்கள்...? இந்தப் பெண்கள் வெளிநாடுகளில் அவலப்படும் போது அதற்கு நாம் அத்தனை பேரும் பொறுப்புதாரிகள் அல்லவா...?

நம் நாட்டு அரசாங்கம் வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பாக வயது குறைந்த பெண்கள் செல்வதையும், ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதையும் தடுக்கும் வண்ணம் சட்டங்கள் கொண்டுவந்திருக்கின்றது.

இருந்த போதும் சில கிராம சேவகர்களும், சில பிரதேச செயலக அதிகாரிகளும், சப் மார்களும் மற்றும் வெளிநாட்டு முகவர் நிலைய உரிமையாளர்களும் லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டும், பல லட்சம் ரூபாய் இலாபத்தை மையமாகக் கொண்டும் போலி ஆவணங்களை தயாரித்து அப்பாவி பெண்களை பல பொய்கள் கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.