சார்ள்ஸை எச்சரித்த ஜோன்ஸ்ரன்!
இங்கே வந்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோபத்தில் பேசிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது வன்னி எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதனின் கருத்திற்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கூறியிருந்தார்.
“வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையினால் தமிழர் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக பெயர்மாற்றப்பட்டு அங்கே சிங்கள குடியேற்றங்கள் குடியேற்றப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வாறு குடியேற்றப்பட்ட குடியேற்றங்களுக்குத் தான் மகாவலி அதிகார சபை முழுமூச்சோடு செயற்பட்டு வருகிறது. இந்த விடயம் தொடர்பாக 13 எம்பிகள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றினை அமைச்சர் சமல் ராஜபக்சவிற்கு கொடுத்திருந்தோம்.
இந்த திட்டத்தால் எங்களுடைய மக்களுடைய இடங்கள் பறிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களில் இருந்து இங்கே குடியேற்றங்கள் வரும் ஆபத்து இருக்கிறது ஆகவே இப்போதைக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும், தமிழர்கள் ஒருவருக்கும் இடம் இல்லை” – என குறித்த கூட்டத்தில் சார்ள்ஸ் எம்பி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
“இங்கே அரசியல் செய்யாமல் சொல்வதை கேளுங்கள் என கடும் தொனியில் சார்ள்ஸ் நிர்மலநாதனைச் சாடியிருந்தார். மேலும் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறானது, மகாவலி அமைச்சினால் அனைத்து பகுதியினருக்கும் இடம் ஒதுக்கப்படிருக்கிறது. பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வந்து விவசாயம் செய்யலாம். உங்களிடம் யாராவது இருந்தாலும் கேளுங்கள், அதை விடுத்து யாரும் கொண்டுவந்துது அமர்த்தியிருக்கிறார்கள் என்று அரசியல் செய்யாதீர்கள்” என கடுமையாகச் சாடியிருந்தார்.
கருத்துகள் இல்லை