மருத்துவ பீட மாணவனின் உடல் அடக்கம்!


உயிரை மாய்த்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் உடல் நேற்று (18) அடக்கம் செய்யப்பட்டது.

மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டி என்ற முகவரியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (23) என்ற பல்கலைகழக மருத்துவபீட 3ஆம் வருட மாணவன் நேற்று முன்தினம் (17) உயிரை மாய்த்தார். கடந்த ஒரு வருடமாக கோண்டாவில் வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று, அங்கு தங்கியிருந்து படித்து வந்தார். அவர் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார். வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் அறிக்கையில் கழுத்தில் கயிறு இறுக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டே இறப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

ஆனாலும் இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து சடலத்தில் இருந்து இரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இம் மாதிரி பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதுமே இறப்புத் தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வரமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, துன்னாலை வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, நேற்று அஞ்சலி இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழ மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ், விரிவுரையாளர்கள், பல்கலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து அஞ்சலி செலுத்தினர்.

சடலம் துன்னாலை, வல்லிபுர இந்து மயானத்தில் சட்டமுறைக்கு அமைய புதைக்கப்பட்டது.

Blogger இயக்குவது.