முனீஸ்வரன் வீதி மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு!


 யாழ் நகரில் ஆஸ்பத்திரி வீதியினையும் பிரதான வீதியையும் இணைக்கும் முனீஸ்வரன் வீதி கடந்த 4 நாட்களாக யாழ்ப்பாண மாநகர சபையினால் வாகனங்கள் உட் பிரவேசிக்காத வகையில் மூடப்பட்டு காணப்படுகின்றது.

இவ்வீதி மூடப்பட்டதன் காரணமாக முனீஸ்வரன் வீதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக முனீஸ்வரன் வீதி வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இன்று அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். மேலும்,

“முனீஸ்வரன் வீதியில் 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன. புடவைகடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் காலணி கடைகள் காணப்படுகின்றன.

குறித்த கடைகளில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர். எனினும் யாழ்ப்பாண மாநகர சபையானது கடந்த 4 நாட்களாக குறித்த வீதியினை யாழ் ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பிக்கும் இடத்தில் வீதிமறியல் போட்டு மூடியுள்ளார்கள்.

எனவே எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக வங்கியினால் குறித்த வீதியானது அபிவிருத்திசெய்யப்படுகின்ற வேளையிலும் நமக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த வீதியானது ஒரு வழிப்பாதையாக பயணிக்க அனுமதிக்கப்படும் என. எனினும் தற்போது யாழ்ப்பாண மாநகர சபையானது எந்தவித முன்னறிவிப்புமின்றி குறித்த வீதியை மூடியுள்ளதன் காரணமாக நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே இந்த விடயத்தினை மாநகர முதல்வர் கவனத்தில் எடுத்து குறித்த வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும். அத்தோடு அதனை ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும்”எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.