50 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்!


 உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 மில்லியனையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக் காலப் பகுதியில் அன்றாடம் 100,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவற்றுள் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவான நாடுகளில் முதன்மை நிலையில் அமெரிக்காவுள்ளது.

அண்மைய ஏழு நாட்களில் சராசரி உலகளாவிய தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 540,000 க்கும் அதிகமாக அதிகரித்து வருவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றிய சுவாச நோயான கொரோனாவினால் இதுவரை 1.25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 32 நாட்களில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி இக் காலப் பகுதியில் 30 மில்லியனிலிருந்து 40 மில்லியனாக கொரோனா நோயாளர்கள் உயர்வடைந்துள்ளனர்.

அத்துடன் 10 நாட்களில் மேலும் 10 மில்லியன் மக்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவை முந்திக் கொண்டு ஐரோப்பாவில் சுமார் 12 மில்லியன் கொரோனா நோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் இடம்பெற்ற உயிரிழப்புகளில் ஐரோப்பாவில் 24 சதவீதம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதி ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு மில்லியன் புதிய கொரோனா நோயாளர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். 

ஐரோப்பா சர்வதேச கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் 51 சதவீதத்தை தற்போது கொண்டுள்ளது.

சமீபத்திய ஏழு நாட்களில் சராசரியாக பிரான்ஸ் ஒரு நாளைக்கு 54,440 புதிய கொரோனா நோயாளர்களை பதிவுசெய்கிறது, இது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவை விட அதிக விகிதமாகும்.

உலகளாவிய இரண்டாவது அலை ஐரோப்பா முழுவதும் சுகாதார அமைப்புகளை சோதித்து வருகிறது, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றை மீண்டும் முடக்கல் நிலைக்கு தள்ளியுள்ளதுடன், பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது.

பல பகுதிகளில் முடக்கல் நிலையை பிரகடனப்படுத்தியுள்ள டென்மார்க், மனிதர்களுக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸின் பாதிப்பு  மிங்க் விலங்கு பண்ணைகளில் கண்டறியப்பட்ட பின்னர் மில்லியன் மிங்க் விலங்குகளை அழிக்க உத்தரவிட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா நோயாளர்களில் சுமார் 20 சதவீதத்தை கொண்டுள்ள அமெரிக்கா, அண்மைய ஏழு நாட்களில் சராசரியாக 100,000 க்கும் மேற்பட்ட அன்றாடம் புதிய கொரோனா நோயாளர்களை பதிவு செய்கிறது.

குறிப்பாக சனிக்கிழமையன்று 130,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் பதிவானார்கள்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச ரீதியில் நோக்குகையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 50,325,072 ஆக காணப்படுகிறது.

அதேநேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,255,489 ஆகவும், குணமடைந்தவர்களின் எணணிக்கை 32,980,472 ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.