கொரோனா தடுப்பூசியை 500 ரூபாய்க்கு விற்க நிறுவனம்!


 கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்புக்காக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவுடன் சேர்ந்துள்ள இந்தியாவின் புணேவில் உள்ள சீரம் நிறுவனம், அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் தடுப்பூசி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

உலக அளவில் கடும் பொருளாதார தாக்கத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகையாக பல முன்னோடி மருந்துக நிறுவனங்கள், வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிப்பு நடவடிக்கைக்காக கைகோர்த்துள்ளன.

இதில் இந்தியாவின் புணேயில் உள்ள சீரம் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்குழுடன் சேர்ந்து வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தற்போது மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்துள்ள இந்த நிறுவனத்தின் ஆய்வக திட்டம், இறுதிக்கட்ட பரிசோதனை பகுப்பாய்வில் உள்ளது.

இந்த நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா பங்கெடுத்தபோது, அவரிடம் வைரஸ் தடுப்பூசி எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பூசி கிடைக்க அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கோவட்-19 வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

சராசரியாக ஒருவருக்கு இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் தேவைப்படும். அப்படியென்றால் ஒருவர் தடுப்பூசி பெற ரூ. 500 முதல் ரூ. 1,200 வரை செலவிட வேண்டியிருக்கும்.

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 300 மில்லியன் முதல் 400 மில்லியன் டோஸ்கள் வரை வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாராகி விடும் என்றும் அதன் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கப்போகிறது என்று அதார் பூனாவாலா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்காக இந்திய அரசுடன் பல்வேறு தனியார் நிறுவனங்களும் கூட்டு சேர வேண்டியிருக்கிறது. எனவே, இந்த நடவடிக்கையில் அடுத்து மேலும் பல முன்னேற்றம் ஏற்படவிருப்பதாகவும் அதார் பூனாவாலா கூறினார்.

“இந்தியாவில் முழுமையாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டுமானால், அதற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூட ஆகலாம்” என மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகளுக்கான சாத்தியம் ஏற்படுமா என கேட்டபோது, “வெவ்வேறு வயதுடையவர்களுக்கு பரிசோதனை நிலையிலான தடுப்பூசி போட்டபோது அவர்களில் சிலருக்கு உடல் சோர்வு, தலைவலி, சாதாரண சளி போன்றவை கண்டறியப்பட்டது. ஆனால், அவற்றுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஓரிரு நாட்களில் அந்த அறிகுறியும் இல்லாமல் போகும்” என்று அதார் பூனாவாலா தெரிவித்தார்.

Blogger இயக்குவது.