700 ஐ கடந்தது பொலிஸ் கொத்தணி!


 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17 831 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (17) செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் மேலும் 398 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். 

இதே வேளை 12 210 பேர் குணமடைந்துள்ளதோடு , 5801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று  திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 80 ஆயிரத்து 843 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

700 ஐ கடந்த பொலிஸ் கொத்தணி

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணித்தியாலங்களில் 720 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

திங்களன்று விசேட அதிரடிப்படையில் ஐவருக்கும் , பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 8 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கமைய விசேட அதிரடிப்படையில் 150 பேருக்கும் , பொலிஸில் 570 பேருக்கும் என மொத்தமாக 720 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

 லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுமிக்கு கொரோனா தொற்று

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 12 ஐ சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர், வைத்திய நிபுணர் ஜி.எஸ். விஜேசூரியா தெரிவித்தார்.

மினுவாங்கொடை , பேலியகொடை கொத்தணிகள்

மினுவாங்கொடை கொத்தணியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 3106 என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. எனினும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் இன்று மாலை வரை 11 205 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இவ்விரு கொத்தணிகளிலும் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 170 ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களில் 8381 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள 17 831 தொற்றாளர்களில் 1552 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும் , 1962 பேர் முன்னைய கொத்தணிகளில் இனங்காணப்பட்டோராவர். அதற்கமைய தற்போது 5560 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 210 பேர் குணமடைந்துள்ளனர். 61 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

சிகிச்சை பெறுவோர்

37 கொரோனா சிகிச்சை நிலையங்களில் 2246 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை 17 இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் 3149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்

இன்று செவ்வாய்கிழமை 89 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த 89 பேரும் இணைத்து மொத்தமாக 3281 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படுகின்ற 23 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2909 பேரும் , கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 162 பேரும் , விமானப்படையினரால் நிர்வகிக்கப்படும் இரு தனிமைப்படுத்தல் நிலையங்களில் 121 பேரும் என 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3192 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தனிமைப்படுத்தல் நிலையங்கள் தவிர 869 பேர் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் 41 பேர் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 30 000 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை 64 476 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோர்

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 வைத்தியசாலைகளிலிருந்து 176 பேர் குணமடைந்துள்ளனர். இதே வேளை 7 இடை நிலை பராமரிப்பு நிலையங்களிலிருந்து 135 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய இன்றைய தினம் 311 பேர் குணமடைந்துள்ளனர்.

இதே வேளை இன்றைய தினம் 6 தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 37 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். 

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர் 

இன்று செவ்வாய்கிழமை டுபாய் மற்றும் கட்டார் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் 85 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.  இன்று அதிகாலை 12.40 மணியளவில் ஈ.வை. 264 விமானம் மூலம் டுபாயிலிருந்து 26 பேரும் , அதிகாலை 1.45 க்கு கியு.ஆர்.668 விமானத்தில் கட்டாரிலிருந்து 37 பேரும் , 6 மணிக்கு யு.எல்.218 விமானம் மூலம் 22 பேரும் நாடு திரும்பினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.