விராட் கோஹ்லி விலக வேண்டும் என்கிறார் கம்பீர்!!

 


றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று அணித்தலைவர் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலக வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் இணையதளமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பெங்களூர் அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோஹ்லி பொறுப்பேற்க வேண்டும். எட்டு வருடங்களாக விளையாடியும் ஐ.பி.எல் சம்பியன் கிண்ணத்தை அவரால் பெற்றுத் தர முடியவில்லை. எட்டு வருடங்கள் என்பது நீண்ட காலம். வேறு எந்த அணித்தலைவராவது எட்டு வருடங்கள் விளையாடி சம்பியன் கிண்ணத்தை பெற்றுத் தராமல் இருந்திருந்தால் அவரால் அதே அணியில் அணித்தலைவராக இருந்திருக்க முடியுமா? எனவே இதற்கு கோஹ்லி பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு வருடம் மட்டும் சரியாக விளையாடவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. விராட் கோஹ்லி மீது எனக்கு எவ்வித பகைமை உணர்வும் கிடையாது. ஆனால் நடந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.  அஸ்வினுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். இரண்டு வருடங்களாக அவரால் பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் கிண்ணத்தைப் பெற்றுத் தர முடியவில்லை. உடனே அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

டோனி, ரோஹித் சர்மா, கோஹ்லி பற்றி பேசுகிறோம். டோனி மூன்று முறையும் ரோஹித் சர்மா நான்கு முறையும் ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளார்கள். அதனால் தான் அவர்களால் நீண்ட நாளாக அணித்தலைவராக இருக்க முடிகிறது. எட்டு வருடங்களாக ஐபிஎல் கிண்ணத்தைப் பெற்றுத் தந்திருக்காவிட்டால் ரோஹித் சர்மாவையும் அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பார்கள். விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்.

நிர்வாகத்திடமிருந்தோ பயிற்சியாளர்களிடமிருந்தோ பொறுப்பு வருவதை விடவும் அணித்தலைவர் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீங்கள் தான் அணித்தலைவர், நீங்கள் தான் தலைவர். பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும்போது விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்’ என கூறினார்.

ஐந்து முறை பிளே ஒஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் சம்பியன் வெல்லமுடியவில்லை.

2013ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணியின் தலைவராக கோஹ்லி உள்ளார். இந்த எட்டு வருடங்களில் மூன்று முறை பிளே ஒஃப்புக்கு பெங்களூர் அணி தகுதி பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு ஆறாம் இடம், 2017ஆம் மற்றும் 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வரும் பெங்களூர் அணி, நடப்பு தொடரில் லீக் சுற்றில் கடைசி நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளே ஒஃப்புக்குத் தகுதி பெற்றது.

ஆனால், இம்முறையும் இறுதிப் போட்டிக்கான வெளியேற்றுப் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்துடன் தொடரிலிருந்து வெளியேறியது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.