இதுதான் கோட்டாபயவின் ஒரே நாடு - ஒரே சட்டமா?


 ஒரே நாடு - ஒரே சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும், ரிஷாட் பதியூதீனுக்கும் இருவேறு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இவ்வாறு பிள்ளையானுக்கு ஒரு சட்டமும், ரிஷாட் பதியூதீனுக்கு இன்னுமொரு சட்டமும் இன்று காணப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்று ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றார். ஆனால் இந்த நாட்டில் இருவேறு சட்டங்கள் இருவேறு தரப்பினருக்கு பயன்படுத்தப்படுகின்றது.

விளக்கமறியல் கைதியாக உள்ள பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து உலா வருகின்றார். அவர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சென்று கலந்துகொள்கின்றார். மேலும் அவர் கட்டிடத் திறப்பு நிகழ்விலும் தலைமைதாங்கி கட்டிடங்களைத் திறக்கின்றார்.

ஆனால் இன்று விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதான் கோட்டாபயவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற கொள்கையா? இதற்காகவா 69 இலட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்துள்ளார்களா? அப்படியானால் அவர்கள் இன்று ஏமாற்றமடைந்துவிட்டார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.