“இது கடைசியல்ல; நிச்சயம் வருவேன்”!


 2020ஆம் ஆண்டு எனது கடைசி ஐபிஎல் தொடர் அல்ல, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி தெரிவி்த்தார்.

13ஆவது ஐபிஎல் சீசன் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே அணி இன்று விளையாடியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை கூட பிளே ஓப் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது இல்லை.

ஆனால், முதல்முறையாக இந்த சீசனில் பிளே ஓப் செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறுகிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி வெளியேறும் நிலையில் அந்த அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது, மூத்த வீரர்களை அதிகமாக தேர்வு செய்தது, ரெய்னா, ஹர்பஜன் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பெரியஅளவில் சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது, தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நாணயச் சுழற்சியின் போது டோனி, கே.எல்.ராகுல் பங்கேற்றனர்.

அப்போது, வர்ணனையாளரும் நியூஸிலாந்து முன்னாள் வீரர் டேனி மோரிஸன், டோனியிடம் “ அடுத்த முறை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடுவீர்களா அல்லது இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா?”எனக் கேட்டார்.

அதற்கு டோனி, “ நிச்சயமாக கிடையாது, சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டும் விளயாடுவேன்” எனத் தெரிவித்தார். இதனால் டோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா அல்லது திடீரென ஓய்வு அறிவிப்பாரா என்று கையை பிசக்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு டோனியிடமிருந்தே பதில் கிடைத்துள்ளது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியில் சென்னையின் இளம்வீரர் ருத்துராஜ் கைக்வார்ட் அரைச்சதம் அடித்து இந்த தொடரில் தொடர்ந்து மூன்று அரைச்சதம் அடித்த சென்னையின் இளம்வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

சென்னையின் வெற்றியால் பஞ்சாப் அணியும் தனது பிளே ஓப் கனவை இழந்து இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் – மே மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.