இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்!

 


“இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.

உலகெங்கும் இன்று(17) வெளியாகும் “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலில் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம்
ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.

சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், தனது சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களைக் கூறும் இந்த நூல் ஏற்படுத்தக்கூடிய அரசியல் அதிர்வுகளை அறிவதற்காக முழு உலகமும் காத்திருக்கின்றது.

“பின்லேடனைக் கொல்லும் திட்டத்துக்கு
இறுதி நேரத்தில் தயங்கினார் பைடன்”
என்ற செய்தியும் அதில் இடம்பெற்றுள்ளது.

“இலக்குத் தப்பினால் இழப்பு அதிகம் என்று கூறி பின் லேடன் மீதான தாக்குதலுக்கு இறுதி நேரத்தில் தயங்கினார் ஜோ பைடன்.”

“கட்டடத்தினுள் பின்லேடன் இருப்பதை புலனாய்வுத் தகவல்கள் துல்லியமாக உறுதிப்படுத்தும்வரை பொறுக்குமாறு கேட்டு குறுக்கிட்ட அவரது தயக்கத்தை நான் பாராட்டியிருக்கிறேன்.”

” எனது பதவிக்காலம் முழுவதும் முக்கிய தீர்மானங்களை எடுத்த வேளைகளில் எல்லாம் அருகே வந்து தயக்கத்துடன் ஜோ எழுப்புகின்ற கடினமான கேள்விகளை நான் மெச்சியிருக்கின்றேன்.”

” முடிவுகளை என் சொந்த உள் மன உணர்வில் தீர்மானிப்பதற்கு அவகாசம் தரும் விதமானது அவரது குறுக்கிடல்கள்.. “

தனது துணை அதிபரும் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவாகி இருப்பவருமான ஜோ பைடன் பற்றி ஒபாமா தனது நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.

நூல் வெளியீட்டை ஒட்டி பராக் ஒபாமா “பிரான்ஸ் 2” தொலைக்காட்சிக்கு வழங்கிய 30 நிமிடநேர பிரத்தியேக செவ்வி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 20.35 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.