நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது!

 


இரா.துரைரெட்னம் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு எடுத்திருந்தால் இன்று அந்த கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வந்திருக்கும். தீர்வு வராமல் விட்டதற்கு இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சரும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டு ஊடக அமையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

“மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நீண்டகாலத்திற்கு அண்மையில் கூடியது அதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் அந்த கூட்டத்தில் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவில்லை. தீர்வு காணப்படாததற்கு மக்கள் பிரதிநிதிகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இயற்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்திக்கூடிய வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மாதங்களாக மண் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சட்டத்திற்கு முரணாகவும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறும் மேற்கொள்ளப்படும் இந்த மண் அகழ்வினை தடுத்திருக்கமுடியும். இது தடுக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்ட இயற்கையினால் காவுகொள்ளப்படும் நிலையேற்படும்.

மண் அகழ்வு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மீதான சந்தேகங்கள் அனைவர் மத்தியிலும் இன்று எழுந்துள்ளது. இவர்களுக்கும் இதுதொடர்பில் தொடர்புகள் இருக்குமா என்ற சந்தேகங்கள் எழுகின்றது.இந்த சந்தேகங்களை தீர்க்ககூடியவாறு ஆளும் கட்சியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் தீர்மானத்தினை கூறியேயாகவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் திட்டமிட்ட குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கெவிழியாமடு கிராமம்,வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புனானை கிராமம், செங்கலடி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளடக்கிய மாதவனை, சின்னமாதவனை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன.

கடந்த சில மாதங்களாக இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்காமை என்பது ஏன் இந்த கூட்டம் நடைபெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனரூடாக திட்டமிட்டவகையில் மாதவனை,மயிலந்தனை போன்ற இடங்களில் 1400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை விவசாயத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. குறித்த சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும் பகுதியில் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ள கருத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

கிழக்கு மாகாண ஆளுனர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக இருந்தும் இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனும் இணைத்தலைவராக இருந்துகொண்டு திட்டமிட்ட குடியேற்றத்தினை நிறுத்துவதற்கான முடிவுகளை தடுப்பதற்கு அந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படாமையை கண்டிக்கின்றேன்.

தங்களது நலன்கள் பாதிக்கப்படும் என்பதற்காக மாவட்ட அபிவிருத்திக்குழுவில் தீர்மானங்களை எடுக்ககூடாது.இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் முடிவுகள் எடுக்கப்படாமல் நிறைவுபெற்றது என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மாற்றியமைக்கப்படவேண்டும். மயிலத்தமடு,மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை கத்திகளை காட்டி மிரட்டுவதாகவும் தமது பகுதிக்குள் வரக்கூடாது என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அன்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இது தொடர்பான தீர்வு எடுத்திருந்தால் இன்று அந்த கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வந்திருக்கும்.தீர்வு வராமல்விட்டதற்கு இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எதிர்காலத்தில் அப்பகுதியில் வன்முறைகள் இடம்பெறாமல் பார்க்கவேண்டுமானால் அரசாங்கத்திற்கு சார்பாக நின்று முடிவுகளை எடுக்காமல் சமூக நலன்சார்ந்து முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைகாணும் கூட்டம்தான் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.எதிர்காலத்தில் இந்த கூட்டம் பிரச்சினைகளை தீர்க்கும் கூட்டமாக மாறவேண்டும்.அபிவிருத்தி என்னும் போர்வையில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.” என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.