மன்னாரில் சடலங்களை புதைக்க கடும் எதிர்ப்பு!


 கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போர்களின் உடலைப் புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானம் இன்னும் பேசுபொருளாகவே காணப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தைப் பயன்படுத்தினால் குழப்பங்களுக்கே அது வழிவகுக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அதற்கு மாறாக அந்தந்த மாவட்டங்களில் பொது இடங்களில் இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கினால் சிறந்தது என கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதியளித்ததாக ஊடகங்களில் கண்டேன். ஆனால் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்ய இடங்கள் கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே இதற்கான யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அறியமுடிந்தது. மன்னார் தீவு கடலால் சூழப்பட்டிருப்பதை பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியதாக அறிகிறேன். இலங்கையை சுற்றிலும் கடல்தான் உள்ளது.

இந்த நடவடிக்கை இடம்பெற்றால் குழப்பத்திற்கே வழிகோலும். அந்த தீர்மானத்தை நான் எதிர்க்கின்றேன். அந்தந்த மாவட்டங்களில் பொதுவான இடங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி கோருகிறேன் – என்று தெரிவித்தார்.

அத்தோடு, மன்னரில் புதைக்க பரிந்துரை செய்யப்படும் முன்னரே மன்னார் மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை காட்ட ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை, முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்கு அனுமதிக்காதவிடத்து அது நாட்டின் சமூக ஒத்திசைவிற்கு பங்கத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கக்கூடும் ஏனெனில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் அன்றேல் தொற்றாளருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பின் அவர்கள் மருத்துப் பராமரிப்பை நாடுவதனை தவிர்ந்துகொள்ளும் சாத்தியம் உள்ளதாக, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஹனா சிங்கர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.