எனக்கு நீதி கிடைக்கும்!


 என் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய். நாட்டில் நீதி நியாயம் இருக்குமாக இருந்தால் நான் விடுதலையாகுவேன் என விளக்கமறியலில் உள்ள எதிர்க்கட்சி எம்பி ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

“இடம்பெயர்ந்த மக்களை வாக்களிக்க அழைத்து சென்ற காரணத்தை வைத்து அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று நான் சிறைப்படுத்தப்பட்டுருக்கின்றேன்.

1990ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 30 வருடமாக வாக்களிக்க சென்று வந்திருக்கின்றார்கள். ஆனால் இந்த முறை மாத்திரம் அவர்கள் வாக்களிக்கச் சென்ற விடயத்தை பெரிதுபடுத்தி அதற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த காரணத்துக்காக என்னை இன்று சிறையிலடைத்து இருக்கின்றார்கள். எனக்கு நடந்த இந்த அநியாயத்தை, படைத்த அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கிறேன்.

இடம்பெயர்ந்த மக்கள் சொந்த மண்ணிலேயே வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவிடம் நான் எழுத்து மூலமாக எழுதி, என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டபோது, அவர் இது உங்களுடைய அமைச்சுக்கு கீழ் உள்ள விடயம்.

எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எனக்கு கீழே இருந்த எனது அமைச்சின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிறகு இது சம்பந்தமான நிதியினை அதிகாரிகள் கேட்கின்றார்கள். எனவே அதற்கு போதுமான நிதி தர முடியுமா? என்று நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவிடம் கேட்டபோது, அவர் உடனே நான் அதனை அனுமதிக்கிறேன், முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று நிதி அமைச்சர் அனுமதித்திருந்தார்.

எனவே இந்த நாட்டிலேயே நீதி, நியாயமாக நடக்கின்ற நம்பிக்கை எனக்குள்ளே இருக்கின்ற காரணத்தினால் எனக்கு நீதி கிடைக்கும், விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எனவே இதனை அல்லாஹ்விடத்தில் முன்வைக்கின்றேன்” என்றார்.

Blogger இயக்குவது.