முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உள் நுழையவோ, வெளிச் செல்லவோ தடை!

 


நாடளாவிய ரீதியில் இன்று முதல் முற்றாக முடக்கப்பட்டுள்ள, 25 பொலிஸ் பிரிவுகள் உட்பட 32 பிரதேசங்களுக்கு உள் நுழைவதும், அங்கிருந்து வெளிச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  

தொழில் உள்ளிட்ட எந்த காரணத்துக்காகவும் முடக்கப்பட்ட பகுதிக்குள் உள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டிய அவர், அதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சுட்டிக்காட்டினார். 

நேற்று மாலை   விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி,  தனிமைபப்டுத்தல் ஊரடங்கு நிலை நீக்கப்பட்ட பின்னர், இன்று அதிகாலை 5.00 மணி முதல் அமுல் செய்யப்படும் விஷேட முடக்க நிலையின் போது நடந்துகொள்ள வேண்டியது எப்படி என தெளிவு படுத்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,

கொழும்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகள், அதாவது மட்டக்குளி, முகத்துவாரம், புளூமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோரப் பொலிஸ், ஆட்டுப்பட்டித்தெரு, மளிகாவத்தை, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட  பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதனை தவிர கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்த, றாகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய 8 பொலிஸ் பிரிவுகளும்,  களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை மற்றும் இங்கிரிய ஆகிய இரு  பொலிஸ் பிரிவுகளும், குலியாபிட்டிய பொலிஸ் பிரிவும் முடக்க்பபட்டுள்ளன. 

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் முடக்க நிலை இருக்கும்.

இந்த 25  பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக, பாணந்துறை -  வேகொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவையும், குருநாகல் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி,  கொழும்பின் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, முகத்துவாரம் ரன்மிண செவண, மத்தேகொட சிரிசந்த உயன தெமட்டகொட, மாளிகாவத்தை என்.எச்.எஸ். குடியிருப்பு தொகுதிகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள், ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறவோ வெளியிடங்களை சேர்ந்தவர்கள் இந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் பிரவேசிக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

குறித்த பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் தொழில் நிமித்தம் கூட அங்கிருந்து வெளியேற முடியாது. முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது நிறுவன ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை நிறுவங்கள் தவிர்க்க வேண்டும். ஆபத்து மிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளே முடக்கப்பட்டுள்ளன. எனவே ஆபத்தான இடங்களில் இருந்து ஊழியர்களை சேவைக்கு அழைப்பது மிக அபாயகரமானது.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தப்பட்ட  அல்லது முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விநியோக நிலையங்கள், பல்பொருள் வர்த்தக நிலையங்கள் மருந்தகங்கள், வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனினும்  அப்பகுதிகளுக்கு வெளியில் இருந்து விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க இதுவரை அனுமதியில்லை. அது தொடர்பில் இன்று ஆராயப்படும்.

அரச ஊழியர்கள், பொலிஸார், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களும் அதே பகுதிகளில் தங்கியிருக்க வேண்டியது அவசியமாகும்.

எவ்வாறாயினும், ஏதேனும் சுகாதார தேவை மற்றும் அத்தியாவசிய தேவை அல்லது  கொரோனா தொற்று அல்லாத வேறு நோய்களுக்காக மருந்தை பெற வேண்டிய அவசியம் காணப்படின் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கான அனுமதியளிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்கள் போன்றோருக்கு  இந்த அனுமதி கிடைக்கும். இவையல்லாத வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளியில் செல்லும் தேவையுடையவர்கள், தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இதனைவிட இன்று முதல் ஊரடங்கு நிலைமைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட  பகுதிகளில் வாகனங்களை நிறுத்திச்செல்ல முடியாது.  பிரதான வீதிகள் முடக்கப்பட்ட பகுதிகளை அண்மித்து காணப்படும் பட்சத்தில் அந்த பகுதிகளை ஊடறுத்து பயணிக்க முடியும். ஆனால் நிறுத்த முடியாது. ரயில்களும் அவ்வாறே.  மேல் மாகாணத்துக்குள் நுழையும் அதி வேகப் பாதைகள் திறக்கப்பட்டாலும், அதன் நுழைவாயில்களில் பொலிஸார் விஷேட கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்படுவர் என தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.