நண்பர்களை கொன்று விட்டு சடலத்துடன் தங்கியிருந்த சைக்கோ!


 தமிழகத்தில் நண்பனுடன் ஒரே அறையிக் தங்கியிருந்த மூன்று நண்பர்களை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள குடியிருப்பில் பனியன் நிறுவன தொழிலாளிகள் இருவர் ஓரே அறையில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் நவம்பர் முதல் வாரம், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்து பொலிசார் ஆய்வு செய்த போது, அங்கிருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது அதன் உள்ளே அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் இறந்து கிடந்த நபர் யார் என்று நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பதும், அவருடன் தங்கிருந்த மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

சங்கரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, அவரிடம் கடைசியாகப் பேசிய நபரிடம் பொலிசார் விசாரித்த போது, ஒரு வழக்கு தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சங்கர் இருந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அனுப்பர்பாளையம் பொலிசாரிடம் கேட்ட போது, மற்றொரு கொலை வழக்கில், சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி திருப்பூர் நீதிமன்றத்தில் பொலிசார் மனு தாக்கல் செய்தனர்.சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன் பின் அவனிடம் நடத்தப்பட விசாரணையில், கடந்த 2018-ல் கங்காநகர் பகுதியில் உடன் தங்கியிருந்த நண்பருடன் ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறியுள்ளான்.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின், 90 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்த நிலையில், இசக்கிமுத்துவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், சம்பவத்தன்று இசக்கிமுத்துவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்து அந்த சடலத்துடன் ஒரு வாரம் அதே அறையில் தங்கியதாக கூறியுள்ளான்.

இந்த கொலைக்கு பின், வெங்கமேட்டிலுள்ள தனது நண்பர் இளம்பரிதியுடன் ஒரே அறையில் தங்கியுள்ளான்.

அங்கு இளம்பரிதிக்கும் அவரது நண்பர் பாக்கியம் அன்பரசு என்பவருக்கும் போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாக்கியம் அன்பரசுவை கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கூட்டாளி இளம்பரிதியுடன் கைதாகிய சங்கர் நவம்பர் 12-ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குடிபோதையில் மூன்று பேரையும் ஒரே பாணியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், இசக்கி முத்து கொலை வழக்கில் சங்கரை 3 வது முறையாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

நண்பர்களுடன் ஒரே அறையில் தங்கி மது அருந்துவதும் போதையில் நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டால் சைக்கோ போல கொடூரமாக கொலை செய்வதையும் சங்கர் வழக்கமாக கொண்டுள்ளான். இதன் மூலம் கூடா நட்பு கேடாய் முடிவதற்கு இது சான்றாகியுள்ளது என்று பொலிசார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.