நாடு முழுவதுமே குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!


 கொரோனா காரணமாக நாடு முழுவதுமே இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெறுமனே வன்னியில் மாத்திரம் அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என வன்னி மாவட்டத்துக்கு புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இக் கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியிருந்தேன். இராணுவ தளபதியின் வழிகாட்டலின் கீழ் கொவிட் 19 தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவிலும் பாதுகாப்பு தரப்பினர் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

வன்னியில் உள்ளது போன்றே நாடு முழுவதும் இராணுவத்தினர் உள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்காக கொழும்பு முழுவதிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்றே நாடு முழுவதும் இராணுவத்தினர் செயற்படுகின்றனர். வன்னியில் மட்டும் இராணுவத்தினர் செயற்படவில்லை என்றார்.

Blogger இயக்குவது.