"ஒருவரின் தன்மானத்தில் கை வைக்காதே"!! - சிறப்பு கதை!!

 


அலுவலகத்தில் வேலை பார்க்கும் #மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை #அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார். 

‘‘#மனசு_சரியில்லை’’ என்றாள் மகள். 

‘‘உனக்கு #அன்பான_குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா. 

‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள். 

‘‘என்னவென்று சொல்... நானும் தெரிந்துகொள்கிறேன்’’ என்றார் அப்பா. 

மகள் சொல்ல ஆரம்பித்தாள்...

‘‘என் அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அவளிடம் நட்புடனும் உரிமையுடனும் பழகுவேன். 

தன் குழந்தையின் முதலாம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட அவள் ஆசைப்பட்டாள். அதற்காக அலுலவகத்தில் ஒரு சில ஊழியர்களிடம் பண உதவி கேட்டாள். அவர்கள் மறுத்துவிட்டார்கள். நான் அதைக் கேள்விப்பட்டு, அவள் கேட்காமலேயே முன்வந்து பணம் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டு எனக்குத் திரும்ப திரும்ப நன்றி சொன்னாள்.

அதன்பிறகு பிறந்த நாள் நெருங்க நெருங்க அவள் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது. என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். பிறந்த நாளுக்குக்கூட என்னை பெயருக்கு அழைத்தாளே தவிர, மனமார அழைக்கவில்லை. ஆனால் அவளுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்களை எல்லாம் திரும்பத் திரும்ப அன்போடு அழைத்தாள். என்னை வேண்டுமென்றே ஒதுக்கியதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 

நான் அவளிடம், ‘பிறந்த நாள் அன்று எனக்கு வேறு வேலை இருக்கிறது, வர முடியாது’ என்று சொல்லிப் பார்த்தேன். அவள் உடனே, ‘சரிங்க மேடம், உங்க இஷ்டம்’ என்று சொல்லிவிட்டாள். விழாவுக்கு வரச்சொல்லி என்னை வற்புறுத்துவாள் என்று எதிர்பார்த்தேன்.’’

‘‘பிறந்த நாள் முடிந்து விட்டதா? நீ போகவில்லையா?’’ என்று கேட்டார் அப்பா.

‘‘நேற்று பிறந்த நாளுக்குப் போகவில்லை. அந்தக் குழந்தைக்காக இந்த பொம்மையெல்லாம் வாங்கி வைத்தேன். அவள் அழைக்காத அலட்சியமும், ஒரு குழந்தைக்கு பொம்மை வாங்கி வைத்து கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சியும் என்னை துன்புறுத்துகிறது அப்பா. என்னால் தூங்கவே முடியவில்லை’’ என்றாள் மகள்.

அப்பா உடனே, ‘‘நீ அவளுக்கு பண உதவி செய்தபிறகு அப்பெண்ணை பொதுவில் அனைவர் முன்னாலும் எதற்காகவாவது உரிமையுடன் கிண்டல் செய்தாயா?’’ என்று கேட்டார்.

‘‘நினைவில்லை அப்பா.”

‘‘யோசித்து வை. நிச்சயம் அப்படி ஒன்று நடந்திருக்கும். அப்பா உனக்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வருகிறேன்.’’

அப்பா வந்ததும் மகள் ஆர்வத்துடன் சொன்னாள். ‘‘ஆமாம் அப்பா, நான் பண உதவி செய்து ஒருவாரத்தில் அவள் ஒரு மஞ்சள் கலர் புடவை அணிந்து வந்திருந்தாள். அது அவள் கணவன் அன்போடு எடுத்துக் கொடுத்ததாம். நான் அதைப் பார்த்த உடனே, ‘என்னப்பா மஞ்ச கலரு ஜிங்குசாண். இதை எல்லாம் கட்டினா கூலிங்கிளாஸ் போட்டுதான் பாக்கணும் போல கண்ணு கூசுது’ என்றேன். அதற்கு சுற்றி இருந்த அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவளும் சிரித்தாளே!’’

‘‘நீ அவள் குழந்தையின் பிறந்த நாளுக்கு உதவி செய்துவிட்டு அவளை அவமானப்படுத்தினால் பதிலுக்கு உன்னிடம் எப்படி அவள் கோபத்தை, இயலாமையை காட்ட முடியும். வேறு வழியில்லை, சிரித்துதானே ஆகவேண்டும். நான் சொல்வது மாதிரி செய்’’ என்று அப்பா ஒரு யோசனை சொன்னார்.

அதன்படி மறுநாள் காலை ஒரு மணி நேரம் முன்பாகவே மகள் கிளம்பி அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றாள். தொட்டிலில் கிடந்த மகனை தூக்கிக் கொஞ்சி, ‘‘பிறந்த நாளுக்கு வரமுடியலடா கண்ணா! இந்தா ஆன்ட்டி உனக்கு பொம்மை வாங்கி இருக்கேன் பாரு’’ என்று பொம்மையை அருகில் வைத்தாள்.

அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘‘நேத்து எங்க குடும்ப வாட்ஸ்அப் குரூப்ல என் சொந்தக்கார பையன் ஒருத்தன், என் பத்தாம் வகுப்பு மார்க் குறைவானது என்று பொதுவில் சொல்லி கிண்டல் செய்தான். 

அவன் அதை ஜாலிக்காக செய்தாலும் பொதுவில் அப்படி கிண்டல் செய்ததை என்னால் தாங்கமுடியவில்லை. அப்போதுதான் நான் உன்னை ‘மஞ்சள் கலர் ஜிங்குசாண்’ என்று கிண்டல் செய்தபோது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. என்னை மன்னித்துக் கொள்’’ என்றாள். 

வேலை செய்யும் பெண் கண்ணீர் மல்க இவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

அங்கிருந்து பைக்கை எடுத்து அலுவலகத்தை நோக்கி வரும்போது, ‘ஒரு மனிதனுக்கு நீ கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவன் தன்மானத்தில் கைவைத்துவிட்டால் அவன் உன்னை எதிர்க்கவே செய்வான்’ என்று அப்பா சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.!!


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.