இலங்கையில் கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!


 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட இரு மரணங்களில் ஒன்று கண்டியிலும் மற்றையது அட்டுலுகமவிலும் பதிவாகியுள்ளது.

கண்டி-கலஹா பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆணொருவரும் அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் 496 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியாகொட ஆகிய கொரோனா தொத்தணியுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை இலங்கையில் 23,987 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்களில் 17,560 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தற்போது வைத்திய கண்காணிப்பில் 545 பேர் வைக்கப்பட்டுள்ளதுடன் 6,309 கொரோனா தொற்றாளர்கள் தற்போதும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் 118 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.