இங்கிலாந்தில் பரவும் மற்றுமொரு கொடிய உயிர்கொல்லி வைரஸ்!


 இங்கிலாந்தில் மற்றுமொரு கொடிய உயிர்கொல்லி வைரஸான H5N8 வான்கோழிகளிடையே பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வே நாட்டில் சில தினங்களுக்கு முன் H5N8 பறவைக் காய்ச்சல் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இதே வைரஸ் இங்கிலாந்திலும் பரவி வருவதாக அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வடக்கு யார்க்‌ஷைர் பகுதியில் உள்ள வான்கோழிப் பண்ணையில் H5N8 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி 3 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் தற்காலிக தடுப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்துக்கான அச்சுறுத்தல்களை குறைக்கவும், சம்பந்தப்பட்ட பண்ணையில் உள்ள சுமார் 10,500 வான்கோழிகள் மனிதாபிமான அடிப்படையில் கொலைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வைரஸால் பொது சுகாதாரத்துக்கு இருக்கும் ஆபத்து மிகக் குறைவுதான் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இங்கிலாந்து நுகர்வோருக்கு உணவு வாயிலான ஆபத்துகள் மிகக் குறைவு என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.

முழுமையாக சமைக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் முட்டைகள் உண்பதற்கு பாதுகாப்பானவை” என்று தெரிவித்துள்ளது. இதே வைரஸ் கடந்த மாதம் டென்மார்க்கில் பரவியபோது 200,000 கோழிகள் பாதுகாப்பு கருதி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.