சாவகச்சேரியில் தொடர் கொள்ளை; ஐவர் கைது!


 சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசம்பர் 2ம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன், 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்த்து கொள்ளையர்கள் ஐவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் மூவர் மட்டும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐவர், வயோதிபர்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டன என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இன்று வரையான விசாரணையில் கொள்ளையர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேக நபர்களின் உடமையிலிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப் பொருள்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.