வீடியோ காலில் பேசியபடி தற்கொலை செய்த பெண்!


 சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் ராணுவ வீரருக்கும் சமூகவலைதளம் ஒன்றின் மூலம் காதல் மலர்ந்தது. ராணுவ வீரரின் சுயரூபம் தெரிந்ததும் வீடியோ காலில் பேசியபடி தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறார் பட்டதாரிப் பெண்.

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எழில்நகர் 128வது பிளாக்கை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மகள் பாரதி (24). பி.காம் பட்டதாரி. இவர், கடந்த 2ஆம் திகதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீஸார், பாரதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாரதியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, பாரதி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது. யாருடன் பாரதி பேசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரேசன் என்பவருடன் பாரதி பேசியது தெரியவந்தது. உடனடியாக முத்துகுமரேசனைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் முத்துகுமரேசன், நாசிக்கில் ராணுவ வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன் பாரதியும் முத்துகுமரேசனும் சமூகவலைதளம் ஒன்றில் அறிமுகமாகியிருக்கின்றனர். அதன்பிறகு நேரில் சந்திக்காமல் போனிலேயே நட்பாகப் பழகியுள்ளனர். பின்னர் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. அதன்பிறகு இருவரும் நேரில் சந்திக்காமல் போனிலேயே காதலித்து வந்திருக்கின்றனர். வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது, குளியல் வீடியோவை முத்துக்குமரேசனுக்கு பாரதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னை வந்திருக்கிறார் முத்துகுமரேசன்.

அப்போது தாம்பரத்தில் பாரதியைச் சந்தித்து பேசியிருக்கிறார் முத்துகுமரேசன். அதன்பிறகு முத்துகுமரேசன், தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். முத்துகுமரேசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் தகவல் பாரதிக்கு தெரியவந்திருக்கிறது. அது தொடர்பாக கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. மனவேதனையடைந்த பாரதி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ காலில் முத்துகுமரேசனிடம் கூறியிருக்கிறார்.

முதலில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். அதை முத்துகுமரேசன் தடுத்திருக்கிறார். பிறகு வீடியோ கால் இணைப்பை முத்துகுமரேசன் துண்டித்துவிட்டார். இருப்பினும் முத்துகுமரேசன் தன்னை ஏமாற்றியதால் தூக்குப் போட்டு பாரதி தற்கொலை செய்திருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் பாரதியைத் தற்கொலைக்கு தூண்டியதாக முத்துகுமரேசனை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.