தமிழ் தலைமைகள் தீர்வை பெறுவதற்காக செயற்படவில்லை!


 தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ்த் தலைமைகள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இப்போது இருக்கின்ற தமிழ் தலைமைகள் எவ்விதமான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களிலும் இவர்கள் அதை எடுக்கப்பபோவதில்லை. சமஸ்டி தீர்வைக்கூட காலம் காலமாக எதிர்த்தவர்கள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்பது வேடிக்கையான விடயமாகும்.

தமிழ் மக்களிற்கான பிரச்சினை தீர்வாக 1949ம் ஆண்டிலேயே சமஸ்டி பற்றி பேசப்பட்டது. காலப்போக்கில் சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்களும் அம்மக்களும் இணங்கியிருந்தார்கள். குறித்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார். ஆனால் தமிழ் தலைமைகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.

ரணில் விக்ரமசிங்க ஒரு இலட்சம் வாக்குகளால் தோல்வியடைந்தார். அப்போது சமஸ்டி கிடைத்திருந்தால் இன்று 10 ஆண்டுகளிற்கு மேல் சமஸ்டி தீர்வு கிடைத்திருக்கும்.அப்போது அதனை ஏற்றுக்கொள்ளாத எமது தலைமைகள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என்பது வேடிக்கையான விடயமாகும்.

இன்றைய சூழலில் ஓர் சுமுகமான சூழ்நிலையை உருவாக்க தமிழ்க் கட்சிகள் விரும்பவில்லை. கூட்டாக இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியை பதவி ஆசைக்காக உடைத்து சென்றனர். 2004ம் ஆண்டில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர். அந்த காலப்பகுதியில்தான் தமிழ் மக்களிற்கு எதிரான ஓர் அனர்த்தத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களை அடிமையாக்கியிருக்கின்றார்கள்.

சகல உரிமைகளும் பறிக்கப்பட்ட 2004ம் ஆண்டில் தேர்தல் இடம்பெற்றது. ஒற்றுமையாக செயற்பட்ட கட்சியை சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோர் உடைத்தார்கள். எனக்கும் அப்போது அச்சுறுத்தல்கள். அதற்கு மத்தியிலும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக நான் இந்த கட்சியை வளர்த்துள்ளேன். இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியை இல்லாது செய்ததன் விளைவாக தமிழ் மக்கள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்துள்ளனர்.

இதேவேளை இறந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவீரர்நாள் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள், தமது பதவிக்காகவே அஞ்சலி தொடர்பில் பேசினார்களேயன்றி உண்மையான உணர்வோடு அஞ்சலி செலுத்த அவர்கள் விரும்பவில்லை” – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.