தொற்று எண்ணிக்கையை மறைப்பது குற்றம்!
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மறைப்பதும், தொற்றாளர்கள் தலைமறைவாகித் திரிவதும் குற்றமாகும். அதிகாரிகளும், தொற்றாளர்களும் அசமந்தப்போக்கில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும். அதிகாரிகளும் தொற்றாளர்களும் சமூகத்தின் நன்மை கருதிப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36 என்று கொரோனாத் தடுப்புக்கான செயலணி இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் யாழ்ப்பாணத்தில் நேற்று 6 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். அத்துடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் பதிவிட்டிருந்தார். இந்த எண்ணிக்கை குழப்பம் தொடர்பில் கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவரான சவேந்திர சில்வாவிடம் கேட்டபோது,
“அந்தந்த மாவட்டங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மறைப்பதும், தொற்றாளர்கள் தலைமறைவாகித் திரிவதும் குற்றமாகும். அதிகாரிகளும், தொற்றாளர்களும் அசமந்தப்போக்கில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும். அதிகாரிகளும் தொற்றாளர்களும் சமூகத்தின் நன்மை கருதிப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 36 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், 6 பேர் மட்டுமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள் என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி தவறானது.
ஊடகங்களுக்குப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், தொற்றாளர்களின் எண்ணிக்கையை ஏன் குறைத்து தகவல் வழங்கினார்கள் என்பது தொடர்பில் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கவனம் செலுத்தும்.” என்று பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை