பலத்த பாதுகாப்புடன் பாதீடு நிறைவேற்றம்!


 

பிள்ளையானும் பங்கேற்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று (11) நிறைவேற்றப்பட்டது.



வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சபையை நடத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடத்தினர்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி ப.லிங்கேஸ்வரன் குறித்த இடத்திற்கு வருகை தந்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய சமயத்தில், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிற்பாடு குறித்த இடத்திற்கு வருகை தந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியதுடன், உள்ளே வருவதற்கு நுழைவாயிலை திறக்குமாறு கோரிய போதும் இணக்கம் ஏற்படவில்லை.

அத்தோடு சபையின் தவிசாளர் சபை மண்டபத்திற்குள் உள்ள தனது அறையில் வெளியே வரதா வண்ணம் இருந்தார். இதனை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் பிள்ளையான் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையில் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொலிஸ் கலகம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டு கூடி நின்றவர்களை கலைத்தனர்.

பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சபை உறுப்பினர்கள் சபை மண்டபத்தினுள் இருந்து வெளியில் வந்து சபை மண்டப நுழைவாயிலை உடைத்து, வெளியில் இருந்து பிள்ளையான் எம்பி மற்றும் கட்சி ஆதரவாளர்களை உள்ளே வரவழைத்ததோடு, தவிசாளரின் அறையினை உடைத்து தவிசாளரையும் வெளியில் சபை உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

அதன்பிற்பாடு எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையை நடத்த விடாது தடுத்த போது இரண்டு சபை உறுப்பினர்களை தாக்கிவாறு உள்ளே சென்று ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பதினொரு பேருடன் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆறு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு உறுப்பினர், சுயேட்சைக்குழு (கருணாவின் கட்சி) ஒரு உறுப்பினருமாக பதினொரு பேர் ஆதரவு வழங்கினார்கள்.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் த.யசோதரன், சபை உறுப்பினர் எம்.வாஸ்தீன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், ஊடகங்களுக்கு அனுமதி வழங்காத வகையில் இன்று வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.