அருட்சகோதரியை கொன்ற அருட்தந்தை, அருட்சகோதரி!


 இந்தியா – கேரளா வரலாற்றில் முக்கியம் வாய்ந்த, 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த கத்தோலிக்க அருட்சகோதரி அபயா கொலை வழக்கில், குற்றவாளிகளான அருட்தந்தை தாேமஸ் கோட்டூர், அருட்சகோதரி ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரளா மாநில சிபிஐ நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் சிறை தண்டனையுடன் சேர்த்து தாேமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 இலட்சமும் ஸ்டெபிக்கு ரூ. 5.50 இலட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பீனா தோமஸ் ஆக 1973ம் ஆண்டு பிறந்த அருட்சகோதரியாக கற்றுவந்த அபயா, 19 வயதில் சென் பியூஸ் கொன்மட்ன் கிணற்றில் 1992ம் ஆண்டு மார்ச் 27ம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அபயா தற்கொலை செய்தார் என்று கூறி பல்வேறு சிபிஐ குழுக்கள் வழக்கை முடிவுறுத்த முற்பட்ட போதிலும் 2008ம் ஆண்டில் அபயாவின் மரணம் கொலை என்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தைகளான தாேமஸ் கோட்டூர், ஜோஸ் பாத்ருகயில், அருட்சகோதரி ஸ்டெபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீண்ட போராட்டத்தின் பின்னர் சிபிஐயால் கோட்டூர் (69-வயது), ஸ்டெபி (55-வயது) ஆகியோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொலை குற்றத்திற்காக அருட்தந்தை கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அருட்சகோதரிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மேலதிகமாக சாட்சியங்களை அழித்த குற்றத்திற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அபயாவுடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு அருட்சகோதரி ஷெர்லி 1992 மார்ச் 27ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தேர்வுக்குப் படிப்பதற்காக எழுந்தபோது கடைசியாக அபயாவை பார்த்திருக்கிறார்.

குளிர் நீரில் முகம் கழுவ அபயா சமையலறைக்குச் சென்றிருந்தார். அப்போது அருட்தந்தையர்களான கோட்டூர், பாத்ருகயில், அருட்சகோதரி ஸ்டெபி ஆகியோர் தகாத உறவில் ஈடுபட்டதை சகோதரி அபயா பார்த்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதை சகோதரி அபயா வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவருடைய கழுத்தை கோட்டூர் நெரிக்க, அபயாவை கோடரியால் ஸ்டெபி தாக்கிக் கொன்றதாகவும், பிறகு மூவரும் சேர்ந்து உடலை கிணற்றில் வீசிவிட்டதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் பாத்ருகயில் விடுவிக்கப்பட்டு, ஏனைய இருவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு எதிராக துணிந்த எதற்கும் அஞ்சாத திருடன்!

அபாய கொலை வழக்கில் பலம்மிக்க குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாமல் பல முறை சிபிஐ தடுமாறிய நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகள் பிடிபட்ட விடயத்தில் திருப்புமுனையாக இருந்த, மிக முக்கிய சாட்சியாக கொலை நடந்த அன்று கொன்மன்டில் திருட சென்ற திருடன் அடக்கா ராஜு என்பவரே இருந்துள்ளார்.

கொலை நடந்த அன்று அடக்கா ராஜு என்ற திருடன் கொன்மன்ட் சுவர் ஏறி குதித்து நுழைந்து, அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கட்டடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், நுழைய காத்திருந்த போது, பின்பக்க படிகட்டில் இரண்டு பேர் ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதன்பிறகுதான், செய்தித்தாள்கள் வழியாக, இவ்விருவரும் அபயாவை கொலை செய்த குற்றவாளிகள் என்பது அவருக்கு தெரியவந்தது.

இதனை சிபிஐக்கு தெரியப்படுத்தி, வழக்கின் முக்கிய சாட்சியாக மாறினார். சாட்சிகள் பலர் பின்வாங்கிய நிலையில் ராஜு மட்டுமே இலஞ்சம் பெறாமல், அச்சுறுத்தல்களுக்கு பணியமறுத்து சாட்சியமளித்துள்ளார். அவரது அந்த ஒற்றை வாக்குமூலம், பல வகைகளில் மறுக்கப்பட்ட நீதியை அபயாவுக்குப் பெற்றுக் கொடுத்தது.

இது தொடர்பில் ராஜு கூறுகையில், “எனது குழந்தைக்கு நீதி கிடைத்துவிட்டது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் பல நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று அவருக்கு நீதி கிடைத்துவிட்டது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

சகோதரனின் கருத்து,

“இந்த தீர்ப்பால் என் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சொர்க்கத்தில் இருந்து அவர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு மாத இடைவெளியில் இருவரையுமே நான் இழந்துவிட்டேன். அபயா என்னைவிட இரண்டு வயது இளையவர். அவருக்கு 14 அல்லது 15 வயது இருந்தபோது, அருட்சகோதரியாக வேண்டும் என்று அழுவாள். என் தந்தை திட்டுவார். ஆனால் அருட்சகோதரிகளும், அருட்சகோதரர்களும் எங்கள் வீட்டுக்கு வரும் போது தரப்படும் மரியாதைகளைப் பார்த்து அவள் ஈர்க்கப்பட்டாள்” என்று அபயாவின் சகோதரர் பிஜு தாேமஸ் டுபாயில் இருந்து பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மறைக்கப்பட்ட சாட்சியங்கள்,

குற்றத்தை மறைக்க குற்றவாளிகள் பல சாட்சியங்களை மறைத்துள்ளனர். இதில் உடலியல்ரீதியான சீரமைப்பும் அடங்குகிறது. அது 2008ம் ஆண்டின் பின்னர் நடத்தப்பட்ட மகளிர் மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. பாலியல் செயற்பாடு தொடர்பில் மார்பக பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனை ஸ்டெபியின் சட்டத்தரணி இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கை இதுவரை நடைபெறவில்லை என்று சமர்ப்பணம் செய்ததாகவும் இந்த வழக்கு தொடர்பான தகவல்களில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் நடைபெற்ற கட்டிடம் மறுசீரமைப்பு என்ற பெயரில் புனரமைப்பும் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.