சமத்துவ ஆட்சியை செய்யுங்கள்!


 நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமத்துவமாக மதித்து, பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“எல்லா நாடுகளும் முற்போக்கு பாதையில் முன்னோக்கி பயணிக்க விரும்புகின்றன. ஏனோ தெரியவில்லை எமது நாட்டு ஆட்சியாளர்கள் பிற்போக்கு பாதையில் பின்னோக்கி பயணிக்கவே விரும்புகின்றனர். பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில், தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கின்ற நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது. தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமை நீடிக்கின்றது.

ஆள்கின்ற இனம், ஆளப்படுகின்ற இனம், அடக்குகின்ற இனம், அடக்கப்படுகின்ற இனம் என்று மக்களை பிரித்து பார்க்கின்றனர். புரட்சிகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் சமத்துவமின்மையே ஆகும்.

எனவே சமத்துவமான நிலைமை உருவாக்கப்பட வேண்டும். மொழி, மதம், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும். இன பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறை மூலமாக தீர்வு கண்டு தாருங்கள். ஐந்து தடவைகளுக்கு ஒரு தடவை ஆட்சி வரும் பின்னர் அகன்று விடும்.

ஆனால் இன பிரச்சினைக்கான தீர்வுதான் இல்லாமல் போய் கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் இவற்றை கருத்தில் கொண்டு கவனமாக செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.