சொக்லேற் கனவுகள் 4 - கோபிகை!!

 


ஆதித்தனின் கனவுகளுக்குள் 

அனுதியோ,

அனுதியின் கனவுகளுக்குள் 

ஆதித்தனோ

இல்லவே இல்லை.


இருவருமே

முகம் தெரியா தங்கள்

வாழ்க்கைத் துணையோடு

'இப்படித்தான் வாழவேண்டும்'

என்று எண்ணிக் கொண்டனர். 


கனவுகளும் 

கற்பனைகளும் தானே

வாழ்க்கைப் பயணத்தை

சுகமாக இயக்குகின்றன. 


அனுதி இருக்குமிடத்தில் 

ஆனந்தம் இருக்கும் 

இது வகுப்பு நண்பர்கள் 

எல்லோரும் சொல்வது. 


என்நாளும் ஓயாத 

அவளுடைய பேச்சும்

இனிமையான மாறாத 

அவளுடைய சிரிப்பும்

எல்லோரையும் 

கட்டிவைத்திருந்தது

அவளோடு...


கண் பார்ப்பதை 

கை செய்யும் 

ஆழமான வித்தை

அவளுக்கு அத்துப்படி....


கலகலவென்ற அனுதி

கலங்கி நிற்பதை

காணவே முடியாது, 

கண நேரமேனும்...


ஆதித்தனோ அனுதிக்கு

நேர் எதிர்.

அதிகம் பேசாத

அமைதி அவனுடையது.


இருவரும் 

இருவேறு துருவங்கள் 

என்றாலும்

இணைந்தே இருந்தனர். 


கலைந்த தலைமுடியை 

கைகளால் கோதியபடியே

உந்துருளியை திருப்பி

இயக்கினான் ஆதித்தன். 


'டேய்....நானும் வர்றேன்டா,'

ஓடிவந்தாள் அனுதி. 

பிரத்தியேக வகுப்பிற்கு

புறப்பட்டவன், 

திரும்பியபடி 

தலை அசைத்தான். 


'என்னையும் கூடவே 

கூட்டிப் போகமாட்டியா?'

சோகமாய் கேட்டவளை, 

அன்பாய் பார்த்தவன், 


'பெரீய்ய ஆள் மாதிரி 

பில்டப்பு விடுவாய்....

கெஞ்சுறதைப் பாரேன்,'

வாய்விட்டுச் சொல்லிவிட்டு

அவளின் முகம் பார்த்தான். 


'என்ர ஆதியிடம் 

நான் கெஞ்சுறன்...'

சொல்லியபடி ஓடிவந்து

தோள்களைப் பற்றி

உந்துருளியில் தாவினாள். 


பட்டென்று அவள் சொல்ல

பட்டாசாய் வெடித்தான் ஆதி. 

'ஏய்..என்னடி, 

றூட்டெல்லாம் மாறுது,?

தாயே, காலமெல்லாம் 

உன்னோட கூடவே இருந்து, 

நாளெல்லாம் மல்லுக்கட்ட

என்னால முடியாது...

ஆளை விடு' என்றான்.


'ஐயே....உன்னோடயா?' 

என்றுவிட்டு 

அருவருப்பது போல

பாவனை செய்தவள், 

'வா..போகலாம்....'என்றாள்

எதுவுமே நடவாத மாதிரி....


ஏனோ..அந்த வார்த்தைகள்

ஆதியை அசைத்துப் பார்த்தது.

உந்துருளி ...உருண்டது..

புயலாய்....Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.