வருடாந்தம் சுமார் 50 சிறுமிகள், கர்ப்பம் தரிப்பு!!

 



இலங்கையில் வருடாந்தம் சுமார் 50 சிறுமிகள், கர்ப்பம் தரிப்பதாக காலி – கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார அதிர்ச்சி தகவலொன்றை தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டியே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் வருடாந்தம் சுமார் 10,000 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகின்றமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக மொனராகலை, பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களினால் மொனராகலை மாவட்டத்தில் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமார் 500 சிறார்கள், பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, மொனராகலை மாவட்டத்தில் ஆண்டொன்றிற்கு சுமார் 10 சிறுமிகள், கர்ப்பம் தரிக்கின்றமை குறித்து தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பம் தரிக்கும் சிறுமிகளை பாதுகாப்பதற்கான மத்திய நிலையங்கள் எந்தவொரு வைத்தியசாலையிலும் கிடையாது என அவர் கூறுகின்றார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்து, அவர்களுக்கான புனர்வாழ்வை உரிய முறையில் வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும், அவர்களை பாதுகாப்பதற்கான நிலையங்கள் கிடையாது எனவும்

நீண்ட கால பாதுகாப்பு மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீள வழமைக்கு கொண்டு வரும் வகையிலான நிலையங்களை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.