"தத்தெடுத்த அம்மா"


இன்று எனது தோழியின் பிறந்தநாள்.அவள் உண்மையில் இரக்க குணம் உள்ள ஒருத்தி,புலம்பெயர் தேசம் ஒன்றில் அவள் வசித்து வந்தாலும் 


"சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரு போலவருமா" என்ற இளையராஜாவின் இசையில் ஒலிக்கும் வாலியின் வரிகளைப்போல் தனது தாய்தேசத்திலும் தாய் மொழியிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிலும் அதிக ஈடுபடுகாட்டுவதோடு அல்லாமல் அவர்களை துயரங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் கரிசனையோடும் இருப்பவள், 


இன்று தோழியின் பிறந்தநாளிற்காக கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்திற்குப் போவதற்கு எனது இன்னொரு தோழியோடு மோட்டச்சைக்கிளில் புறப்பட்டேன். 


பிறந்த நாளிற்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  ஒரு கிராமத்து வயது முதிர்ந்தவர்களிற்கு  மதிய உணவு வழங்குவதோடு அம்மாக்களிற்கு சாறியும் அப்பாக்களிற்கு சாறமும் வழங்குவதென்ற ஒழுங்கோடுதான் சென்றிருந்தோம். 


எமது நட்புறவான சோலை அண்ணாவின் வீட்டில்தான் 50 பேரிற்கு மதிய உணவினை சமைப்பதற்கு ஒழுங்கு செய்து சமையலிற்குத் தேவையான பணத்தினையும் நேற்றே அனுப்பிவிட்டு இன்று புறப்பட்டிருந்தேன். 


ஒன்றரை மணித்தியால பயணத்தில் நாமும் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு சென்றிருந்தோம்.நாம் சென்ற இடம் ஒரு அளவான மண்டபமாகவே இருந்தது. 


நாம் போய்ச்சேர்ந்தபோது அங்கு யாரும் வந்திருக்கவில்லை,நாங்கள் சென்று அந்த மண்டபத்தை கூட்டி கதிரைகளை அடுக்கிக்கொண்டிருக்கவே ஒவ்வொரு அம்மாக்களாக வர தொடங்கியிருந்தார்கள். 


நானும் எனது தோழியும் வரும் அம்மாக்களோடு கதைத்துக்கொண்டிருந்தோம்.சில அப்பாக்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள், 


எனக்கு வயதான அம்மாக்கள் என்றால் நிறைய பிடிக்கும்.எனது அம்மா தற்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த அம்மாவைப்போல இருப்பாவோ அல்லது அந்த அம்மாவைப்போல இருப்பாவோ என்றெல்லாம் எண்ணி கற்பனை செய்வேன், 


இன்றும் அதே நினைவுதான்,பல அம்மாக்களை  ஒரு இடத்தில் சந்திக்கிறேன்,அதுவும் யுத்தத்திற்குள் வாழ்ந்து பல கஸ்ரங்களை சுமந்த அம்மாக்கள்,அவர்களோடு கதைப்பதற்கு நானும் தோழியும் அமர்ந்து கொண்டோம். 


வந்தவர்கள் அனைவரும் எம்மைச் சுற்றி இருந்தார்கள்,ஒவ்வொருவரின் சுகநலன்களையும் விசாரித்தபடி இருந்தேன்,இப்போது புதிதாக வந்த அம்மா என்னை பார்த்ததும் கண்கள் கலங்கியபடி ஏக்கப்பார்வை பார்ப்பதுபோல் தெரிந்தது. 


அருகில் இருந்த கதிரையை எடுத்து "அம்மா இதில இருங்கோ என்று கூறிவிட்டு மற்ற அம்மாக்களும் வர வர கதிரைகளையும் கொடுத்து கதைத்தபடி இருந்ததால் நேரத்தையும் நான் கவனிக்கேல, 


சோலை அண்ணா வீட்டில் சமைத்து பார்சலாகவே உணவினை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டுவந்திருந்தார்.அவர் வந்து எம்மை அழைத்தபோதே நேரத்தினைப் பார்த்தேன். 


எப்படியும் ஒரு 45 பேரளவில் அம்மாக்கள் அப்பாக்கள் என்று வந்திருந்தார்கள்,நாங்கள் இரண்டு நாட்களிற்கு முன்பே அவர்களை வரும்படி கூறியிருந்தோம், 


ஒவ்வொருவரிற்கும் உணவினைக் கொடுத்துவிட்டு அவர்கள் குடிப்பதற்கான தண்ணீர் போத்தல்களையும் எடுத்து வச்சிட்டு அருகில் இருந்துகொண்டோம். 


சில அம்மாக்கள் "பிள்ளையள் நீங்களும் எங்களோட சேர்ந்து சாப்பிடுங்கோவன் என்று அன்பாக கேட்டுக்கொண்டார்கள், 


என்னோடு வந்த தோழியிடம் " அம்மாக்களோட சேர்ந்து நீயும் சாப்பிடு என்றுகூறி  சாப்பாட்டுப் பார்சல் ஒன்றை தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டேன். 


இப்போது என்னை யாரோ ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் ஒரு உணர்வாக இருந்தது,திரும்பிப் பார்த்தேன், 


முதல் வந்தபோது என்னை ஏக்கத்தோடு பார்த்த அம்மாவே இப்போதும் என்னை பார்ப்பதுபோல் தெரிந்தது, எனக்கும் மனசுக்கு ஒரு மாதிரியாக அந்தரமாக இருந்தது,அதனால் என்ன ஏது என்று விசாரிப்போம் என்று அந்த அம்மாவிடம் உடனே எழுந்து சென்றேன், 


"அம்மா என்ன யோசிக்கிறீங்கள்,யோசிக்காம முதல்ல சாப்பிடுங்கோ என்று கூறி அவரின் அருகில் போய் இருந்துகொண்டேன், 


இந்த அம்மா ஏன் என்னைப்பார்த்து கவலைப்பட்டபடி இருக்கிறா..?சரி அம்மா சாப்பிட்டு முடிய நேரம் இருந்தால் ஆறுதலாக என்ன விடயம் என்று கேட்கத்தான் வேணும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அனைவருக்கும் உணவு கிடைத்துவிட்டதா என்று ஒரு மேற்பார்வையிட்டேன். 


"பிள்ள ஒரு பிடி சோறு தரட்டே ராசா என்று ஒரு குரல் கேட்டது. 


யார் என்று நிமிர்ந்து பார்த்தேன்,பக்கத்த இருந்த அம்மாதான் கேட்கிறா,எனக்கு தூக்கிவாரிப் போட்டபோல ஒரு சிலிர்ப்பு,நான் வீட்டில சிறு வயதில் இருந்தே ஒரு வேலையும் செய்யமாட்டேன், 


என்னைக்கொண்டு ஏதாவது வேலை செய்யோணும் என்றால் எங்கட அம்மா என்னை ராசா,செல்லம்,அச்சாப்பிள்ளை  என்றெல்லாம் சொல்லித்தான் வேலை சொல்லுவா,இப்படிச் சொன்னாத்தான் நானும் செய்வன், 


இந்த அம்மா என்னை ராசா என்று கூப்பிட்டதும் என்ர அம்மாவின் நினைவே வந்தது.மனசெல்லாம் குளிர்ந்து அப்படியே கண்களில் கண்ணீர் ததும்பி ஓடியது,கைகளால் துடைத்துக் கொண்டேன். 


ஓம் அம்மா எனக்கு கையில எல்லாம் தரவேண்டாம் உங்கட ஆசைப்படி எனக்கு இரண்டுவாய் தீத்தி விடுங்கோ என்று கூறினேன், 


அம்மாவிடம் வாங்கி சாப்பிட்டிட்டு வீட்டில் இருந்து வரும்போது கொண்டுவந்த சாறிகளையும் சாறங்களையும் ஒவ்வொருவரிற்கும் கொடுத்தேன். 


இப்போது ஒரு அம்மா "பிள்ளை மழை காலத்தில நுளம்புகளுக்க படுக்கேலாம இருக்கடா ஏலுமென்றால் நுளம்புவலை ஆரிட்டயும் வாங்கி தாறீங்களே என்றா. 


சரி அம்மா என்னால முடிஞ்ச அளவுக்கு ஆரிட்டயும் வாங்கித்தர முயற்சி செய்யிறன்,அப்படி நுளம்புவலை கிடைச்சா இங்க கொண்டுவந்து கட்டாயம் தருவன் என்று கூறினேன், 


பலர் எனக்கு நன்றிகளை கூறினார்கள்,எனக்கு இந்த நன்றியெல்லாம் வேண்டாம்.இது எனது நண்பியின் பிறந்தநாளிற்காக அவர் உங்களிற்கு வாங்கித் தந்தது.உங்கள் எல்லோரினதும் நிறைவான வாழ்த்து மட்டும் அவளிற்கு போதும் என்று கூறினேன். 


பல அம்மாக்கள் நன்றி கூறியபடி விடை பெற்றுக் கொண்டார்கள்.ஏக்கமாக என்னைப் பார்த்த அந்த அம்மாவை பார்த்தேன்,அழுதபடி இருந்தா. 


"அம்மா இதென்ன பழக்கம்,ஏன் அழுறீங்கள்,அழக்கூடாதம்மா அழாம முதல்ல கண்ணைத் துடையுங்கோ என்று கூறி அம்மாவை அரவணைத்தபடி ஏன் அம்மா அழுறீங்கள் என்று கேட்டேன். 


"பிள்ள என்ர மகள் மாலதி படையணியில இருந்து 2008 ஆம் ஆண்டு வீரச்சாவு,சரியா உங்களைப்போலதானம்மா முகச்சேர்ப்பும்,உயரமும் கருப்பு நிறமும் நீட்டு முகமும் அதுதான் எனக்கு உங்களைப் பார்த்ததும் என்ர பிள்ளேன்ர நினைப்பு வந்திட்டுது.எனக்கு இரண்டு பிள்ளைகள் வீரச்சாவு,மகனும் 2000 ஆண்டு வீரச்சாவு, 


நாங்கள் யாழ்ப்பாணம் அரியாலை சொந்த இடம்,எனக்கு 4 பிள்ளையள்,இவற்ர உழைப்பு காணாது.அதால என்ர மூத்தவன் தகப்பனோட சேர்ந்து மூட்டை தூக்கப் போறவன்,95ஆம் ஆண்டு கிளாலி கடல்ல கப்பலில கொண்டுவாற சாமானுகளை ஜெற்ரியில வச்சு ஏத்தி வாகனத்துக்கு மாத்துறவே. 


அதில மூட்ட சுமந்துதான் என்ர மூத்த பிள்ள தன்ர உழைப்பில முதல் முதலா எனக்கு இதப்போலதான் தீபாவளிக்கு பெரிய பூ போட்ட நீல கலறில சீல எடுத்துக் கொண்டுவந்து தந்தவன். 


என்ர பிள்ளை சீலயைத் தந்திட்டு பட்ட சந்தோசத்தை நினைச்சுப்பார்க்கேலாம இருக்கடா.என்ர பிள்ளையும் இப்ப உயிரோட இல்லை, 


நீ என்ர பிள்ளைகளின்ர சேர்ப்பாக இருக்கிறாயம்மா,என்ர இரண்டு பிள்ளைகளும் இல்லாம நான் எவளவு வேதனைப்படுறன் ஒருக்கா என்ர வீட்ட வந்திட்டு போவனம்மா,உன்னைப் பார்த்தா என்ர மகளும் சந்தோசப்படுவா என்றுகூறி அழுதா,


சரி அம்மா நான் வீட்ட வாறன்.அப்பா எங்கயம்மா என்று கேட்டான்,அவருக்கு முதலே முட்டு வருத்தம் இருந்தது.பிறகு ஏலாம வந்து அவர் 2007 ஆண்டே செத்துபோனாரம்மா.ஒரு மகன் கலியாணம் கட்டி மனிசி பிள்ளையளோட வவுனியாவில இருக்கிறான். 


இப்ப என்னோட இருக்கிற மகளுக்கும் மனிசன் இல்ல,மனிசன் செல்லில செத்துபோனார்,அவளுக்கு பிள்ளையளும் இல்ல,அதால அவாவும் இப்ப என்னோடதான் இருக்கிறா, 


நான் வயல் வேலையளுக்குத்தான் போனறான் புள்ள,கண்கெட்ட கடவுள் என்ர எல்லா சந்தோசங்களையும் பறிச்சுப்போட்டான் என்று கூறி அழுதா. 


வயசுபோன நேரத்தில அம்மா வயல் வேலைகளுக்கு போறதென்றுகூறி அழ என்னாலும் மனசுக்கு தாங்க முடியேல,எனக்கும் என்ர அம்மான்ர நினைவு வந்திட்டுது நானும் அழுதேன், 


அம்மா  நீங்கள் அழாதையுங்கோ.முதல்ல கண்ணைத்துடையுங்கோ ,உங்கட பிள்ளைகளிற்கு நாங்கள் ஈடாகமாட்டம்தான், 


இரண்டு மாவீரர்களின்ர அம்மா எங்கட கண்ணுக்கு முன்னால கஸ்ரப்படுறத பார்த்திட்டும் நாங்கள் கவனிக்காம விட்டிட்டு இருப்பமா அம்மா.? 


நீங்கள் யோசிக்காதையுங்கோ நான் என்ன கஸ்ரப்பட்டென்றாலும் கடைசிவரை உங்களை பார்ப்பன் அம்மா,உங்கட பிள்ளைகளில ஒன்றா என்னையும் பாருங்கோ, 


நாங்கள் மாதம் மாதம் உங்களை வந்து பார்ப்பம்,எங்களால முடிந்த உதவியை செய்வனம்மா யோசிக்காமல் இருங்கோ என்று கூறினேன், 


அம்மாவின் வீட்டிற்குப் போகும் வழியில் ஒரு சிறு கடை இருந்தது,எனது இன்னொரு தேவைக்காக வைத்திருந்த பணத்தில் அம்மாவுக்கு ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொடுப்போம் என்று நினைத்தேன், 


"அம்மா வாங்கோ ஒருக்கா கடைக்கு உங்களுக்கு இப்ப இல்லாத பொருட்கள் அவசரம் தேவைதான் என்று நினைக்கிற பொருட்கள் கொஞ்சத்த வாங்குங்கோ என்று கூறினேன், 


அம்மா அதில் ஒரு பொருளாக வெற்றிலை,பாக்கும் வேண்டிக்கொண்டா,அத்தோடு கைச் செலவுக்கு சிறு தொகைப்பணமும் அம்மாவிடம் கொடுத்தேன். 


அம்மா அழுதா,பிள்ளை இப்படி என்ர பிள்ளைகள்கூட முகாமால வந்ததுக்குப் பிறகு எனக்கு செய்ததில்லையடா என்று கூறி அழுதா. 


சரி அம்மா உப்பிடி கதைக்காதையுங்கோ.எங்களால முடிஞ்ச உதவியை மாதம் மாதம் செய்யிறம்,அழக்கூடாது,கவலைப்படக்கூடாது


இதுதான் என்ர போன் நம்பர்,அவசரம் ஏதும் தேவை என்றாலோ மனசுக்கு கவலையாக இருந்து என்னோட கதைக்கோணும் என்று தோன்றினாலோ எனக்கு ஒரு மிஸ்கோல் தாங்கோ நான் எடுத்து கதைப்பேன் என்று கூறிவிட்டு விடைபெற்றோம், 


எனக்கும் வெளிநாட்டில இருக்கிற என்னுடைய தோழிக்கும் அம்மா இல்லை, எங்கள் இருவரோடும் இணைந்து கொண்டாள் என்னோடு சேர்ந்து வந்த தோழியும். 


இப்போது நாங்கள் மூன்று பேருமாக இணைந்து எங்களிற்கென்றொரு அம்மாவை தத்தெடுத்துக்கொண்டோம்.....


பிரபாஅன்பு

22.12.2020

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.