காத்தான்குடியில் பெண்கள் கைது!
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் போதனைகளில் பங்கேற்று, தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்கள் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
பெண் ஒருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
அண்மையில், மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழுவினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், கிடைத்த தகவல்களுக்கமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் ஏற்கனவே உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என தெரிய வருகிறது.
இந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்ட விவகார விசாரணைகளில் ஏற்கனவே 15 ஆண்களும் மூன்று பெண்களுமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே தற்போது மேலும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை